புதன், 6 ஜூலை, 2011

கருணாநிதி படத்தை அகற்றக்கோரிஒன்றிய கூட்டத்தில் நாற்காலி வீச்சு: தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில், கருணாநிதி படத்தை அகற்ற கோரியதைத் தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட, நாற்காலி தூக்கி வீசப்பட்டது.ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி வார்டு மறுசீரமைப்பு குறித்த சிறப்பு கூட்டம், ஒன்றிய தலைவர் இந்திரா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் சிங்கராஜ், "இங்குள்ள கருணாநிதி படத்தை அகற்றிவிட்டு, முதல்வர் ஜெயலலிதா படத்தை வைக்க வேண்டும்' என்றார்.இதனால் இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர் ராசுவிற்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிங்கராஜ், அங்கிருந்த சக்கர நாற்காலியை தூக்கி வீசினார்.
இதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் முருகேசன் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் பின், கூட்ட அரங்கிற்கு முதல்வர் படத்துடன் வந்த, ஒன்றிய அ.தி.மு.க., செயலர் முருகையா பாண்டியன், துரைராஜ் பி.டி.ஓ.,விடம் , கருணாநிதி படத்தை அகற்றி, முதல்வர் படத்தை வைக்குமாறு கூறினார். இதற்கு ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, கலெக்டரிடம் பேசி வருவதாகக் கூறிச் சென்ற பி.டி.ஓ., "அங்கீகரிக்கப்பட்ட அளவில் முதல்வர் படம் வைக்கலாம்' என்றார். அதன்படி கருணாநிதி படம் அகற்றப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=270009

கருத்துகள் இல்லை: