புதன், 13 ஜூலை, 2011

சன், "டிவி', தினகரன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் : ரஞ்சிதா நம்பிக்கை

சென்னை: ""நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லை. அது, "மார்பிங்' முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. என்னை பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், "டிவி' மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,'' என, நடிகை ரஞ்சிதா கூறினார்.

சென்னையில் நேற்றிரவு, நிருபர்களுக்கு ரஞ்சிதா அளித்த பேட்டி: சில பத்திரிகைகள், மீடியாக்கள் மனசாட்சி இல்லாமல் என்னைப்பற்றி எழுதி, தெருவில் நிற்க வைத்துவிட்டன. இஷ்டத்திற்கு கற்பனையாக எழுதி, என் தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரத்தை பறித்துவிட்டன. அருவருக்கத்தக்க, ஆபாச காட்சிகளை, சன் நெட்வொர்க், "டிவி'க்கள், தினகரன் நாளிதழ், தினகரன் வெப்சைட்டிலும், வெளியிட்டனர். இப்படி, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, என்னை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக புகார் கொடுக்க சென்னையில் கால் வைத்தால், உடனே, கைது செய்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால், ஒன்றரை ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி சென்னை வரவில்லை; போலீசிலும் புகார் செய்யவில்லை. அப்போது நான் புகார் கொடுத்திருந்தால், எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அப்போது இருந்த ஆட்சி நிலை வேறு, தற்போது உள்ள ஆட்சி நிலை வேறு. தனி மனித உரிமைகள் பற்றி அப்போது எனக்குத் தெரியாது. தற்போது முழுவதுமாக தெரிந்து கொண்டதால் தைரியம் வந்துள்ளது. தற்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
லண்டனில், 168 ஆண்டு பாரம்பரியமிக்க, "நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகை, தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சில தினங்களுக்கு முன் மூடப்பட்டுள்ளது. சித்தரித்த ஆபாச காட்சிகளை வெளியிட்டு, என் கண்ணியத்தைக் காயப்படுத்திய, "டிவி' பத்திரிகைகள் மீது ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்ட ரீதியாக நடவடிக்கை கோரியே போலீசில் புகார் செய்துள்ளேன்.

நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல. அது, "மார்பிங்'முறையில் சித்தரிக்கப்பட்வை. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. உண்மையை மாற்றி மாற்றி பேச முடியாது.
காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் பற்றிய முழு விவரத்தை போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். இப்போது வெளிப்படையாக சொல்ல நான் விரும்பவில்லை. என் மீது அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், "டிவி', செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. முதல்வரை நேரில் சந்திப்பீர்களா என கேட்கிறீர்கள். நான் உங்கள் மீடியாக்கள் மூலமே முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274082

கருத்துகள் இல்லை: