வெள்ளி, 22 ஜூலை, 2011

கோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கலைஞர் குடும்பத்து பிளவுகள் வெளிப்படலாம்

தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு,கோவையில் கூடுகிறது. கட்சியின் தலைவர் கருணாநிதி இதற்கு தலைமை வகிக்கிறார்;;. இதேவேளை நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. செயற்குழு, பொதுக்குழு கூட்ட அரங்கை பார்வையிட, நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் ஸ்டாலின், கோவை வந்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பின், சிங்காநல்லூர், உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா அரங்கம் சென்று, மாநாட்டு பந்தல், உணவு தயாரிப்பு அறையை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார். கொடி, பேனர்கள்: பொதுக்குழு, செயற்குழு நடப்பதையொட்டி, திருச்சி ரோட்டில் ஏராளமான பேனர், கட்லி அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நகர சுவர்களில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரியை வரவேற்று பெயின்ட் விளம்பரமும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தலில் படுதோல்வி கண்டு நிலைகுலைந்து போயிருக்கும் தி.மு.க.,வினரை, நில அபகரிப்பு வழக்குகளும் பாய்ந்து, மீளா நெருக்கடியில் தள்ளியுள்ளன. தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமின் பெற முடியாமல், திகார் சிறையில் அடைபட்டுள்ளனர். இதே வழக்கில், சி.பி.ஐ.,யால் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதியின் அமைச்சர் பதவியும் பறிபோய்விட்டது. இந்த சூழ்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது தி.மு.க.,வினர் மீதான நில அபகரிப்பு வழக்குகளை எதிர்கொள்வது குறித்து, இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதன்பின், மாலை 4 மணிக்கு கூடும் செயற்குழுவில் கருணாநிதி பங்கேற்கிறார்; கட்சி பொருளாளர் ஸ்டாலின், முன்னணி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்;கின்றனர் நாளை காலை 10 மணிக்கு கூடும் பொதுக்குழுவில், 1,950 உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

அழகிரி பங்கேற்பாரா? : தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன, ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா, கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவி மத்திய அமைச்சர் அழகிரியிடம் இருந்து பறிக்கப்படுமா என்ற பரபரப்பு, கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயற்குழு, பொதுக்குழுவில் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், இக்கூட்டங்களில் அழகிரி பங்கேற்கமாட்டார் என்ற பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அதுபோன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அழகிரி, தானும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். இதனால் செயற்குழு, பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடக்கலாம் என்ற யூகம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை கூட்டியுள்ளது. கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான முடிவுகள் தள்ளிப்போடப்படலாம் என்றே கூறப்படுகிறது. அதே வேளையில், கட்சியினர் மீதான நில அபகரிப்பு வழக்குகளை எதிர்கொள்வது, அ.தி.மு.க., அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது, அதன் மூலமாக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி தட்டி எழுப்புவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை: