செவ்வாய், 5 ஜூலை, 2011

இலங்கையின் போர்க்குற்றத்தை ஐ.நா. முழுமையாக விசாரிக்க வேண்டும்-வரவர ராவ் கோரிக்கை


நெல்லூர்: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் முடிவின்போது இலங்கை ராணுவத்தினர் செய்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமுதாயமும், ஐ.நா.வும் பாரபட்சமற்ற விரிவான விசாரணையை நடத்த வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று புரட்சிகர எழுத்தாளரும், நக்ஸல் இயக்க ஆதரவாளருமான வரவர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தக் கண்ணீருக்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தமிழ் உலகையும் தாண்டி பிற மொழியினரிடமிருந்தும் எழத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில், இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான குமுறல் வெடித்துக் கிளம்பியுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையமும் இலங்கைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நக்சல் இயக்க ஆதரவாளரும், புரட்சிகர எழுத்தாளருமான ஆந்திராவைச் சேர்ந்த வரவர ராவ் இலங்கையின் போர்க்குற்றத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

நெல்லூரில் நடந்த புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரவர ராவ் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐநா.வும், சர்வதேச சமுதாயமும் இணைந்து இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும்.

இலங்கை அரசின் உத்தரவின் பேரில், அதன் திட்டத்தின் பேரில்தான் இலங்கை ராணுவம் அப்பாவி மக்களுக்கு எதிராக பல்வேறு அக்கிரமக் கொடுமைகளில் ஈடுபட்டது. இதை ஐ.நா. விசாரணை மூலம்தான் உலகுக்கு அம்பலப்படுத்த முடியும்.

மீடியாக்களையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் போர் பாதித்த பகுதிகளுக்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஐ.நா. சபையும், சர்வதேச சமுதாயமும் எடுக்க வேண்டும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்த ராணுவ அடக்குமுறைகள், போர்க்குற்ற மனித உரிமை மீறல்கள் முழுமையாக அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

2004ம் ஆண்டு மத்தியில் பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அன்று முதல் போர் முடிந்த காலகட்டம் வரை இலங்கைக்கு செய்த ராணுவ உதவிகள் உள்ளிட்ட பிற உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இலங்கை குறித்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதையும் இந்திய அரசு வெளிப்படையாக அறிவித்தாக வேண்டும்.

சட்டிஸ்கரில் இன்று ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டிருப்போர் அப்பாவி மக்கள்தான். எனவே ராணுவத்தை உடனடியாக அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும். மேலும் ஜார்க்கண்ட்டில் ராஞ்சி உயர்நீதிமன்றத்தால் ஐந்து ஆதிவாசிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றார் ராவ்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/05/varavara-rao-probe-into-war-crimes-lanka-aid0091.html

கருத்துகள் இல்லை: