திங்கள், 18 ஜூலை, 2011

கேள்விக்குறியாகும் ஊடக அறம்!

ஊடக அறம் என்றால் என்ன என்று தீர்மானிக்க வேண்டிய புதிய காலக் கட்டத்தை உருவாக்கியிருக்கிறார் உலக-ஊடக-நாயகர் ராபர்ட் முர்டோக்.
ஒட்டுக் கேட்டு, பரபரப்புச் செய்திகள் வெளியிட்ட வழக்கில் சிக்கிய பின்னர் "நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகையை மூடிவிட்டார். தற்போது தனது பத்திரிகையால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு மற்ற பத்திரிகைகளில் விளம்பரமும் வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன் நிற்கவில்லை. கொலைசெய்யப்பட்ட மில்லி டவுலரின் பெற்றோரிடம் நேரில் போய், அவர்களது போன் ஒட்டுக் கேட்கப்பட்டதற்காக மன்னிப்புக் கேட்கவும் செய்திருக்கிறார் அவர். பிரிட்டிஷ் ஸ்கை பிராட்காஸ்டிங் நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள கூடுதலாக 7.8 பில்லியன் பவுன்டு முதலீடு செய்யும் அவரது திட்டமும் முடங்கிப்போனது.
இவ்வளவெல்லாம் செய்தாலும்கூட அவர் வழக்குகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஜூலை 19-ம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலை விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி பதில் சொல்லியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.
தவறுகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கிய பத்திரிகை, தான் அவ்வாறு பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் முர்டோக். அவரது பத்திரிகை பற்றி அவரே விமர்சித்திருக்கிறார். ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது என்பதாக அவர் அதில் குறிப்பிடவில்லை என்பது மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்பது மட்டுமே போதாது என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்படி மன்னிப்புக் கேட்பதாலும், தவறுக்குப் பொறுப்பேற்று 168 ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகையை மூடிவிடுவதால் தனக்கு நன்மதிப்புக் கிடைக்கும் என்பதாலும், குற்றத்துக்கான தண்டனையை அல்லது அபராதத்தை அது குறைக்க உதவும் என்பதாலும் தான் இதையெல்லாம் செய்கின்றாரே தவிர, உலக ஊடக நாயகர் ராபர்ட் முர்டோக் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கிறார் என்று நம்புவதற்கில்லை.
இந்த வழக்கில் சுமார் 4,000 பேருடைய தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது நிச்சயமாக நிரூபிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இது என்ன இந்தியாவா, வழக்குத் தொடுத்தவர் சாகிற வரைக்கும் வழக்கை இழுத்தடித்து, அவரை மிரட்டி வாபஸ் பெறச் செய்ய! ஆகவே ஒவ்வொரு நபருக்கும் 30,000 பவுன்டு இழப்பீடு வழங்கினாலும்கூட, 120 மில்லியன் பவுன்டு இழப்பீடு வழங்க நேரிடலாம் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் தங்கள் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என்று புகார் தந்தால், இந்தத் தொகை மேலும் உயரக்கூடும்.
இந்தியாவில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக ஊடகம் மற்றும் பத்திரிகைத் தொழிலில் ஈடுபடுவது போல, இங்கிலாந்தில் ஈடுபட முடியாது. அங்கு சட்டங்கள் அதற்கு இடம் தருவதில்லை. ஆகவே, இவ்வாறாக ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணைக்கு வந்தவுடன் அங்கே முர்டோக் போன்ற ஊடக நாயகர்களே மண்டியிட வேண்டிய அவசியம் நேர்கிறது.
பொதுமக்கள் நலம்நாடிப் பொதுக் கருத்தைச் சொல்க- என்பதுதான் உண்மையான பத்திரிகை தர்மம். ஓர் ஊழலைக் கண்டறிய ஓர் ஊடகம் இத்தகைய செயல்களில் ஈடுபடுமானால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், வெறும் பரபரப்புக்காகவும், மற்றவர்களைவிட அதிக எண்ணிக்கையில் நுகர்வோரைத் தன்பக்கம் இழுக்கும் உத்தியாக நினைத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அது நிச்சயமாக தண்டனைக்குரிய குற்றம்தான்.
ஆனால், பத்திரிகை அறம் என்பது இன்றைய நவீன போட்டிகள் நிறைந்த பத்திரிகை உலகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் கூட்ஸி தனது "டிஸ்கிரேஸ்' நாவலில் குறிப்பிடுவதைப்போல -"தனிநபர் அந்தரங்கம் பொது வியாபாரம் ஆகிவிட்டது'. அதனால்தான், தனிநபர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
இதற்குத் துணை போனவர்கள் காவல்துறையினரும், தொலைபேசித் துறையினரும் என்பதுதான் அடிப்படை உண்மை. அவர்கள் இதற்கு இணங்க மறுத்திருந்தால் அல்லது அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்னை முற்றியிருக்காது.
உலக மயத்தின் உயிர்ப்பே ஊழல்தான் என்பதை இந்த விவகாரம் வெளிப்படுத்துகிறது. சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட, பிரிட்டிஷ் நிர்வாகம் விலைபோயிருக்கிறது என்கிற உண்மையும் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் இத்தகைய புகார் எழுந்திருந்தால், இந்தப் புகார் சொன்னவர் காணாமல் போயிருப்பாரேயொழிய, அந்த ஊடகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். ஏனென்றால், அனைத்து ஊடகங்களுக்கும் பின்புலத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளது.
இருப்பினும்கூட, இன்று முர்டோக் சந்தித்துள்ள அதே நிலையை இந்திய ஊடகங்களும் சந்திக்க நேரும் என்பதை உணர்ந்து இப்போதே இத்தகைய செயல்களை நிறுத்திக் கொள்ளவும், நிரூபிக்கப்படாத தகவல்களை அம்பலப்படுத்தாமலும், பத்திரிகைப் புலனாய்வு என்பது பொதுமக்கள் நன்மைக்காக மட்டுமே செய்வதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாசகர்களையோ, பார்வையாளர்களையோ ஈர்க்கவேண்டும் என்பதற்காகக் கலாசாரச் சீரழிவுகளைக் காட்சி வைப்பவர்களும், வியாபாரம் என்ற பெயரில் வரம்புகளை மீறுபவர்களும் தங்களது சமூகக் கடமையை உணர்ந்துசெயல்படவேண்டும் என்பதை அவர்களுக்கு யார் உணர்த்துவது? இந்திய முர்டோக்குகளை யார் நெறிப்படுத்துவது?
http://www.dinamani.com/edition/story.aspx?

கருத்துகள் இல்லை: