வெள்ளி, 8 ஜூலை, 2011

மாறனுக்கு பதில் யார்? சென்னையில் கருணாநிதியை சந்திக்கும் பிரணாப்

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார்.

2ஜி விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக இதே 2ஜி ஊழலி்ல் சிக்கிய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். திமுக அமைச்சர்கள் இருவர் பதவி விலகியுள்ளாதால் அந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்வுள்ளனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி விரைவில் சென்னை வருகிறார். அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தி்த்து ராசா, மாறன் ஆகியோருக்கு பதிலாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

மாறன் ராஜினாமா செய்த பிறகு காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் சந்தித்து பேசவிருப்பது இது தான் முதல் முறை.

காங்.-திமுக உறவில் மாற்றம் இல்லை:

தயாநிதி மாறன் ராஜினாமாவால் காங்கிரஸ்-திமுக உறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று கூறப்படுகின்றது. 2ஜி விவகாரத்தில் மாறன் பெயர் அடிபட்டதுமே அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸுக்கு வேலை கொடுக்காமல் தயாநிதி மாறனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குவதில் காங்கிஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் முனைப்பாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த முடிவு திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனவே தயாநிதி மாறனின் ராஜினாமாவால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுகவிற்கு நேரம் சரியில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி ஆகியோர் திஹார் சிறையில் உள்ளனர்.

தமிழகத்திலும் நாளும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வரும் நிலையில் திமுக, காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/08/pranab-mukherjee-meet-karunanidhi-aid0128.html

கருத்துகள் இல்லை: