புதன், 13 ஜூலை, 2011

சன் டிவி நிறுவன தலைமை செயலதிகாரியாக விஜயக்குமார் நியமனம்

சென்னை: சன் டிவி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது விஜயக்குமார் சன் டிவி நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரியாக இருந்து வருகிறார்.

இன்று முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக சன் டிவி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை பங்குச் சந்தைக்கு சன் டிவி நிறுவனம் கொடுத்துள்ள தகவலில், சன் டிவி நிறுவன தலைமை நடவடிக்கை அதிகாரியாக உள்ள கே.விஜயக்குமார், நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக 2011, ஜூலை 12ம் தேதி முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதிதான் தலைமை நடவடிக்கை அதிகாரியாக விஜயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். அதுவரை அப்பொறுப்பில் இருந்து வந்த அஜய் வித்யாசாகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து விஜயக்குமார் அப்பொறுப்புக்கு வந்தார்.

சன் டிவி நிறுவனம் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஏர்செல் நிறுவன விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், அவருடைய சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு சிக்கல் உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டு அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்ந்து வருகின்றன.

கலாநிதி மாறனுக்கும் விசாரணைக்கு வருமாறு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தலைமை செயலதிகாரியை நியமித்துள்ளது சன் டிவி நிறுவனம்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/13/sun-tv-elevates-vijay-kumar-as-ceo-aid0091.html

கருத்துகள் இல்லை: