வியாழன், 21 ஜூலை, 2011

ஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கிறார் அழகிரி?

சென்னை: கோவையில் நடக்கவிருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முக ஸ்டாலினுக்கு புதிய பதவி கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அமைச்சர் முக அழகிரி பொதுக்குழுவில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது.

கோவையில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் திமுகவின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டம் திருப்பூருக்கு மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது. அதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் சிக்கி திமுக கடும் நெருக்கடியில் உள்ளது. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறனும் 2ஜி ஊழல் புகாரில் சிக்கி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தினமும் குறைந்தது ஒரு திமுக நிர்வாகியாவது நில மோசடி புகாரில் சிக்குகிறார்.

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே இந்த கூட்டம் நடக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது. மாவட்டம், மாநகரம், நகரம், ஒன்றியம் என்று இருக்கும் கட்சி அமைப்பை மாற்றி மக்களவை, சட்டப்பேரவைக் குழுக்கள் என்று அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த கட்சி அமைப்பை மாற்றுவதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முறையாக செயல்படவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சி அமைப்பை மாற்றக் கூடாது என்று கட்சியினர் கூறுகின்றனர்.

கட்சி அமைப்பை மாற்றினால் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதால் மாவட்டச் செயலாளர்கள் தொகுதி குழுக்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதை மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரி ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் கோவையில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அழகிரி தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல அழகிரியும் கூட இக் கூட்டத்தைப் புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/21/mk-azhagiri-boycott-dmk-general-body-meet-aid0128.html

கருத்துகள் இல்லை: