செவ்வாய், 26 ஜூலை, 2011

அடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்


சென்னை:உண்மைகளை மறைத்து, வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து வீடு கட்டி விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., ஜாபர் சேட் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திடீர், "ரெய்டு' நடத்தினர்.
நேற்று போலீசார் நடத்திய வேட்டையில், ஜாபர் சேட், தி.மு.க., ஆட்சியில், கருணாநிதியின் செயலராக இருந்த ராஜமாணிக்கம் உட்பட அதிகாரிகள் பலரும் அடங்குவர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழக போலீஸ் உளவுத் துறையின் தலைமை பொறுப்பில் இருந்தவர் ஜாபர் சேட். இவர் கண்ணசைவில் தான் அரசின் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. அரசு அதிகாரத்தின் அச்சாகச் செயல்பட்ட இவர், டெலிபோன் ஒட்டுக் கேட்பில் அதிக அளவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், தேர்தல் கமிஷன் நெருக்கடி காரணமாக இவர் விடுப்பில் சென்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், ஜாபர் சேட் விடுப்பு முடிந்து மீண்டும் வந்தார். அப்போது, மண்டபம் அகதிகள் முகாமை கவனிக்கும் கூடுதல் டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், இவர் மீது பல புகார்கள் எழுந்தும், "பவர் புல்' இடத்தில் இருந்ததால், எந்த புகாரிலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஜாபர் சேட் மீது, புகார்கள் வரத் துவங்கியுள்ளன.
லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவரான சங்கர், சமீபத்தில் தமிழக தலைமைச் செயலரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008ம் ஆண்டு, சென்னை திருவான்மியூர், காமராஜர் நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டு மனை எண் 540, தி.மு.க., அரசால் ஜாபர் சேட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அவரது மகள் பெயருக்கும், இறுதியாக மனைவி பர்வீன் ஜாபர் பெயருக்கும் மாற்றப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், சிலரது உதவியுடன் குற்றம் செய்யும் நோக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்ட ஜாபர் சேட், முக்கிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

மனைவி பர்வீன் ஜாபர் மூலம், அப்பகுதியில் மனை ஒதுக்கீடு பெற்றிருந்த முன்னாள் முதல்வரின் செயலராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருடன் சேர்ந்து, தி.நகரில் உள்ள லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து, இந்த மனையை கட்டடமாகக் கட்டியுள்ளார். இந்த விஷயத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி, ஜாபர் சேட் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் சுயலாபம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பரிசீலித்த தலைமைச் செயலர், தமிழக டி.ஜி.பி., ராமானுஜத்திற்கு பரிந்துரைத்தார். மனு மீது விசாரணை நடத்துமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், ஐ.ஜி., குணசீலன் மற்றும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.லஞ்ச ஒழிப்புப் பிரிவில், ஜாபர் சேட் மற்றும் சிலர் மீது கூட்டுச் சதி, மோசடி மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் என, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனைவியை சமூக சேவகர் என்று கூறிவீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில், திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் காமராஜர் நகரில் உள்ள, 540வது மனை, 2008ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி ஜாபர் சேட்டுக்கு ஒதுக்கப்பட்டது. அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் அப்பழுக்கற்ற அரசு ஊழியருக்கான பிரிவின் கீழ் இந்த ஒதுக்கீட்டுக்காக, வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணை (எண்: 429) பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களுக்குள் இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

பின், இதே மனை, ஜாபர் சேட்டின் மகள் கல்லூரி மாணவி ஜெனிபர் பெயருக்கு அரசின் விருப்புரிமையில், "சமூக சேவகர்' பிரிவில் ஒதுக்கப்பட்டது. இதன் பின், சில மாதங்களிலேயே இந்த ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டு, ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபருக்கு அரசின் விருப்புரிமையில், "சமூக சேவகர்' பிரிவில் ஒதுக்கப்பட்டது.
மனையின் பரப்பு, 4,756 சதுர அடி; இதன் மதிப்பு 1.26 கோடி ரூபாய். இத்தொகையை அவர் இரண்டே தவணைகளில் செலுத்தி, விற்பனை பத்திரத்தையும் பெற்று விட்டார்.
இதேபோல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது செயலர்களில் ஒருவரான ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் பெயருக்கு, ஜாபர் சேட் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட மனையின் அருகில் உள்ள, 538வது மனை, 2008ல் ஒதுக்கப்பட்டது. இதன் பரப்பு, 4,668 சதுர அடி; இதன் மதிப்பு 1.12 கோடி ரூபாய். இத்தொகையும் முழுமையாகச் செலுத்தப்பட்டு, விற்பனை பத்திரமும் பெறப்பட்டுவிட்டது.

இந்த இரு மனைகளும் சேர்ந்து மொத்தம், 9,424 சதுர அடி வருகிறது. இவர்கள் இருவரும், லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, ஒரு கட்டுமான நிறுவனத்தை துவக்கி, வர்த்தக நோக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, 2009ல் இதற்கான பணிகளை துவக்கினர்.நான்கு மாடிகள் கொண்ட இந்த வளாகத்தில் கட்டப்பட்ட 12 வீடுகளும், சதுர அடி 8,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ஜாபரின் மனைவியை சமூக சேவகராகக் காட்டி, அரசு மனையை பெற்று, அதில் வீடு கட்டி பல கோடி ரூபாய் லாபம் அனுபவித்தது, இவை இரண்டின் மூலம், வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றியது தான், தற்போதைய பிரச்னையின் அம்சம்.

ரெய்டு நடந்த இடங்கள்

1. சென்னை அண்ணா நகர், "ஆர்' பிளாக், 14வது தெருவில் உள்ள ஜாபர் சேட்டின் வீடு.

2. அவரது வீடு அருகில் உள்ள கஸ்தூரி ராஜ் என்ற பொறியாளர் வீடு.
3. மேற்கு மாம்பலத்தில், "ஈ.ஏ.பி.டி., சொலுயூஷன்' நிறுவனம் நடத்தி வரும் ஜெய்சங்கர் என்பவரது அலுவலகம்.
4. எழும்பூர், ரித்தர்டன் சாலையில் உள்ள நஜிமுதீன் என்பவர் வீடு.
5. வேப்பேரியில் உள்ள, பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிட்.,
6. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின், நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீடு.
7. சென்னை திருவான்மியூரில் உள்ள ஜாபர் சேட்டின் நண்பர் 
பல்ராஜ் ஜான்சன் வீடு.
8. தி.நகரில் உள்ள லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகம்.
இந்த இடங்களில், காலை 8 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.சென்னை தவிர, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜாபர் சேட்டின் மாமனார் சலீமின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அண்ணா நகர்: சென்னை, அண்ணா நகரில் உள்ள ஜாபரின் வீட்டில், ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்பையா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள் காலை அதிரடியாக உள்ளே நுழைந்தனர். வீட்டில், ஜாபர் சேட்டின் உறவினர் பெண் ஒருவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது ஒத்துழைப்புடன், வீட்டின் அனைத்து பகுதிகளும் முழுவதுமாக சோதிக்கப்பட்டன.
ஜாபர் சேட்டின் வீட்டில் இருந்து சில ஆவணங்களையும், ஜாபர் பயன்படுத்திய, "லேப் டாப்பும்' ரெய்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

பிற்பகல் 1.45 மணிக்கு ரெய்டு முடிந்து, அனைத்து அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, ஜாபர் சேட்டின் வீட்டில் இருந்து பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதில், புகார் தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருவான்மியூர்: ஜாபர் சேட்டின் நண்பரான வங்கி மேலாளர் பல்ராஜ் ஜான்சனின், சென்னை கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் நகர், முதல் தெருவில் உள்ள வீட்டில் காலை 8 மணிக்குச் சென்ற, 15க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், மதியம் 1 மணி வரை தீவிர விசாரணை நடத்தினர். ஐந்து மணி நேரம் நடந்த இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வேப்பேரி வள்ளியம்மாள் தெருவில், பர்னாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

பெரியகுளம்: பெரியகுளத்தில், ஜாபர் சேட்டின் மாமனாரும், 
முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான, டாக்டர் சலீம் வீடு உள்ளது. இவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேற்று காலை 11.30 மணி முதல், மதியம் 2.20 வரை சோதனை நடத்தினர். டி.எஸ்.பி., ஜான் கிளமண்ட், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணை முடியும் வரை வீட்டின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், சலீம், அவரது மனைவி நூர், மருமகள் நிகார் ஆகியோரிடம் போலீசார் பல கேள்விகளை கேட்டு பதில் பெற்றுள்ளனர். முக்கிய ஆவணங்கள் பலவற்றை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மண்டபம் வீட்டில் ஜாபர்!: மண்டபம் சேதுரஸ்தா முதல் தெருவில் உள்ள பேரூராட்சி மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில், ஜாபர் சேட் தற்போது வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சென்னையில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையை அடுத்து, மண்டபத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடக்கலாம் என, காலை 9.30 மணி முதல் பத்திரிகையாளர்கள் குழுமினர்.

காலை 10.30 மணிக்கு வழக்கம் போல, மண்டபம், "கேம்ப்' அலுவலகத்திற்கு வரும் ஜாபர் சேட், பத்திரிகையாளர்களை தவிர்ப்பதற்காக நேற்று அலுவலகம் வரவில்லை.
அவரிடம் மொபைல் போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, ""இந்த விசயத்தில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை; பேட்டி கொடுப்பதாக இல்லை; புறப்பட்டு செல்லுங்கள்,'' என, கடுகடுப்புடன் கூறினார்.பின், மண்டபம் பகுதியில் அவரை காண முடியவில்லை; சென்னை சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: