சனி, 9 ஜூலை, 2011

தற்போதைய நிலவரப்படியுள்ள சில முக்கிய இலங்கை இந்தியச் செய்திகள்

சிறிலங்காவில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் –


பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசையும், பிற்பகல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக லியம் பொக்ஸ் கலந்துரையாடியதாக அதிபர் செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள கரிசனை குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று மாலை லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் நிகழ்த்திய கதிர்காமர் நினைவுப் பேருரையின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 15ம் நாள் வெளியாகும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
0000

கனேடிய தமிழரின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா படையினரால் அச்சுறுத்தல்

சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கனேடியத் தமிழரான றோய் சமாதானத்தின் குடும்பத்தினருக்கு சிறிலங்காப் படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு றோய் சமாதானம் கனேடிய சமஸ்டி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் சிறையில் இருந்த போது அனுபவித்த கொடுமைகள் குறித்து கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகைக்கு றோய் சமாதானம் விளக்கமாக கூறியிருந்தார்.

இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அவரது வீட்டுக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இவரது மனைவியைத் தேடியுள்ளனர்.

இதனால் அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0000

யாழ்ப்பாணத்தில் குறிவைக்கப்படும் கூட்டமைப்பு வேட்பாளர்கள்

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் மீது பரவலாகத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இரவு நேரங்களில் கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள், மலக்கழிவுகள், தார் போன்ற கழிவுத் திரவங்களை வீசி வருகின்றனர்.

வலிகாமம் மேற்கு, வலிகாம்ம் தெற்குமேற்கு, சாவகச்சேரி பிரதேசபைத் தேர்தல்களில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களே அதிகளவில் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று அதிகாலையில் வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் நாகரஞ்சினி ஜங்கரன் வீட்டின் மீதும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவரது வீட்டின் முன்புறத்தில் தார் அடைத்த பைகளை வீசியுள்ள மர்ம நபர்கள், கற்களையும் போத்தல்களையும் வீட்டின் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
0000

அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி நாளை திறக்கப்படுகிறது


யாழ்ப்பாணத்தில் சுமார் 21 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அச்சுவேலி –தொண்டமானாறு வீதி நாளை மீளவும் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ளது.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வீதியை திறந்து வைக்கவுள்ளதாக யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

1990இல் இரண்டாவது கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர் இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

1992ம் ஆண்டு தொண்டமானாறு பாலம் குண்டு வைத்து அழிக்கப்பட்ட பின்னர் முற்றிலுமாக மூடப்பட்ட இந்த வீதி, கடந்த ஆண்டு செல்வச்சந்நிதி ஆலய திருவிழாவுக்காக சிறிலங்கா படையினரால் சில நாட்கள் மட்டும் தற்காலிகமாக திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0000
சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் சுரேஸ் சாலியே போலிக் காணொலியை தயாரித்தார்

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றக் காட்சியின் உண்மையான மூலப்பிரதி என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட காணொலியை இராணுவப் புலனாய்வுப் பிரிவே தாயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் காணொலியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்.கேணல் சுரேஸ் சாலியே தயாரித்து தமிழ்மொழியில் குரல் மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் பணிப்பின் பேரிலேயே லெப்.கேணல் சுரேஸ் சாலி இந்த போலிக் காணொலிப் பதிவைத் தயாரித்துள்ளார்.

லெப்.கேணல் சுரேஸ் சாலி நன்றாக தமிழ்மொழியில் உரையாடும் தேர்ச்சி பெற்றவர் என்பதாலேயே அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்தக் காணொலிப் பிரதியைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவே வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0000


ஜெயலலிதாவை கொழும்பு வருமாறு சிறிலங்கா அரசு அழைப்பு

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை கொழும்புக்கு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்தவாரம் சென்னைக்குச் செல்லவுள்ள இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்புக் கடிதத்தை தமிழ்நாடு முதல்வரிடம் கையளிக்கவுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைக் கையாள்வது குறித்து கடந்த வாரம் கொழும்பு சென்றிருந்த பிரசாத் காரியவசம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த ஆலோசகர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, சிறிலங்கா அரசின் இந்த அழைப்பை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நிராகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தென்னிந்திய தகவல்கள் தெரிவிப்பதாகவும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது
0000
எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!

மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.

அதில்,

எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.

இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
0000
தில்ஷன் கொலை : குற்றவாளியான ராணுவ அதிகாரி கைது
சென்னை : சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம். சிறுவனை சுட்டுக்கொன்றவர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ராமராஜன் என்றும், இவர் நாளை பத்திரிகையாளர் சந்திப்பில், சிறுவனை எப்படி கொன்றார் என்று நடித்துக் காட்டுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: