வெள்ளி, 8 ஜூலை, 2011

சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார்

சென்னை: "சன் பிக்சர்ஸ்' சக்சேனா மீது மேலும் ஒரு வினியோகஸ்தர், கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக, சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி புகாரின் பேரில், சிறையில் உள்ள சக்சேனா அளித்த தகவல்களின் அடிப்படையில், அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட தம்பிதுரை, ஐயப்பன், சசி, சிவா உள்ளிட்ட சிலரையும் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். நேற்று மாலையுடன், போலீஸ் காவல் முடிந்த நிலையில், சக்சேனா, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சன் பிக்சர்ஸ் தலைமை நிதி அதிகாரி உன்னிகிருஷ்ணனுக்கு, ஆவணங்களுடன் வருமாறு தகவல் அனுப்பி, அவரையும் வரவழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அவர், அளித்த தகவல்களின் அடிப்படையில், கோர்ட்டில் மேலும் இரண்டு நாட்கள் அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கே.கே.நகர் போலீசில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளியான ஐயப்பன் இருவர் மீதும் மேலும் ஒரு புகார் பதிவானது.
சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன், "முருகன் புரொடக்ஷன்' நிறுவன உரிமையாளர் சண்முகவேல், 30, புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம், "தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை வெளியிட, சன் பிக்சர்ஸ் மூலமாக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு பேசி, அம்மாதம் 8ம் தேதி 20 லட்ச ரூபாய் சன் பிக்சர்ஸ்சுக்கு அனுப்பப்பட்டது. இதற்காக, தியேட்டர் உரிமையாளரிடம் 65 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இந்த பணத்தை சன் பிக்சர்ஸ்சுக்கு அனுப்ப கால தாமதம் ஏற்பட்டது. படத்தை பிப்ரவரி 12ம் தேதி திரையிட வேண்டியிருந்ததால், 11ம் தேதி கே.கே.நகர் நியூ பங்காரு காலனியில் உள்ள ஜெமினி கலர் லேப் சென்டரில், சக்சேனாவை சந்தித்தேன். அவர், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கெட்ட வார்த்தைகளால் திட்டினார். மேலும், தன்னுடன் அய்யப்பன் உள்ளிட்ட சிலரை சேர்த்துக் கொண்டும், கையாலும் கட்டையாலும் தாக்கி அறையில் என்னை கட்டிப் போட்டனர். அதன் பிறகு சகோதரர் மூலம் 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அனுப்பி விட்டார்.இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி ஐயப்பனையும் போலீசார் கைது செய்தனர். வினியோகஸ்தர்களைத் தொடர்ந்து, தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் விரைவில் சக்சேனா மீதும் "சன் பிக்சர்ஸ்' நிர்வாகத்தின் மீதும் புகார் அளிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. கைதான ஐயப்பன் என்பவர், சென்னையில் தி.மு.க., முக்கிய புள்ளியின் பினாமியாக செயல்பட்டார். தி.நகர் உட்பட நகரின் பல இடங்களில் இட மோசடி செய்ததாகவும் இவர் மீது புகார்கள் கூறப்படுகின்றன. அவரிடம் விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271213

கருத்துகள் இல்லை: