வெள்ளி, 8 ஜூலை, 2011

எந்திரன் பட விவகாரம்: கலாநிதி மாறன் மீதும் வழக்குப் பதிவு?

சென்னை: எந்திரன் படத்தை அதிக விலைக்கு வாங்க வைத்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் தர மறுப்பதாகவும் சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் மீது திரையரங்க உரிமையாளர்கள் இன்று சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

பெரும் தொகை கொடுத்து வாங்கிய அந்தப் படம், எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடாததால் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு அவர்கள் கமிஷனரிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்டோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் ரமேஷ் பாபு (ரமேஷ் திரையரங்கம், ராமநாதபுரம்), குமார் (கே.எஸ். தியேட்டர், திருப்பூர்), ஆனந்த் (ஜெய்ஆனந்த் தியேட்டர், ராஜபாளையம்), விஷ்ணு (சினி வள்ளுவர் தியேட்டர், பழனி), ரகுபதி (ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் பொள்ளாச்சி), ஆகியோர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களுடன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரும் வந்தார்.

அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதும் சக்சேனா, உதவியாளர் அய்யப்பன் மீதும் புகார் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:

சன் பிக்சர்ஸ், 'எந்திரன்' படத்தை தயாரித்து வெளியிட்டது. அப்படத்தை திரையிடுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அய்யப்பன் என்பவர் மூலம் அட்வான்ஸ் தொகை கொடுத்தோம். அதில் எங்களுக்கு தர வேண்டிய 1 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 431 ரூபாயை எங்களுக்கு தராமல் இழுத்தடிக்கிறார்.

இந்த அட்வான்ஸ் தொகையை தருமாறு பலமுறை கேட்டோம். ஆனால் தரவில்லை. எனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதும் அய்யப்பன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறும்போது, "சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அட்வான்ஸ் தொகையில் ராமநாதபுரம், ரமேஷ், தியேட்டருக்கு ரூ.27 லட்சமும், திருப்பூர் கே.எஸ். தியேட்டருக்கு ரூ. 10 லட்சத்து 32 ஆயிரத்து 956ம், ராஜபாளையம் ஜெய் ஆனந்த் தியேட்டருக்கு ரூ.27 லட்சத்து 89 ஆயிரத்து 114 யும், பழனி சினி வள்ளுவர் தியேட்டருக்கு ரூ.21 லட் சத்து 83 ஆயிரத்து 60ம், பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. தியேட்டருக்கு ரூ.40 லட் சத்து 10 ஆயிரத்து 761ம் வர வேண்டியுள்ளது," என்றார்.

கலாநிதி மாறன் மீதும் வழக்கு?

எந்திரன் பட விவகாரத்தில், சன் பிக்சர்ஸ் தலைவர் கலாநிதி மாறனையும் விசாரிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெ

இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிதி மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் விசாரிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/movies/news/2011/07/08-kalanidhi-maaran-also-trouble-enthiran-issue-aid0136.html

கருத்துகள் இல்லை: