செவ்வாய், 12 ஜூலை, 2011

உப்புமாவால் உலக புகழ் பெற்றவர்

மும்பையை சேர்ந்தவர் ப்ளாய்டு கார்டோஸ், 43. உயிர் ரசாயனம் குறித்த படிப்பை இவர் படித்ததால், இவரை விஞ்ஞானியாக்க ஆசைப்பட்டனர் பெற்றோர். ஆனால், கார்டோசுக்கு சமையல் கலை மீது கொள்ளை பிரியம். சமையல் படிப்பு பள்ளியில் பயின்றார். மும்பை தாஜ் ஓட்டலில் முதல் நாள் பயிற்சிக்கு சேர்ந்த இவரை, 200 கிலோ வெங்காயம் உரிக்க சொல்லி கண்ணீரை வரவழைத்து விட்டனர் சீனியர் சமையல்காரர்கள்.

இந்தியாவிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு நாட்டு சமையல் தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்ட கார்டோஸ், நியூயார்க்கில், கிரே குன்ஸ் என்ற தலைமை சமையல்காரரிடம் பன்னாட்டு சமையல் வித்தைகளையெல்லாம் கற்றுக்கொண்டார். இனியும் மற்றவரிடம் வேலை செய்யக்கூடாது, என்பதை உணர்ந்த கார்டோஸ், நியூயார்க்கில் "தப்லா' என்ற பெயரில் ஓட்டலை துவக்கினார். இந்திய மசாலா வகைகளையெல்லாம் வெளிநாட்டு உணவு வகையில் கலந்து சமைத்தார். இதனால், இவருக்கு வாடிக்கையாளர்கள் கூடினர். வீட்டுக்கே சென்று உணவு வழங்குவது போன்ற பணிகளை தன்னுடைய ஓட்டல் மூலம் செய்தார்.

இவரது திறமையை பாராட்டி, "புட் டிவி' கடந்த 2007ல் "மனிதநேய விருது' வழங்கி கவுரவித்தது. 2006ல் சமையல் புத்தகங்களை வெளியிட்டார் கார்டோஸ். உடனடி சமையல், நான்கு நிமிட சமையல் போன்ற புத்தகங்களை, 2008 பிப்ரவரியில் வெளியிட்டு பிரபலமானார் கார்டோஸ். நியூயார்க்கில் கடந்த மாதம் நடந்த சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ், சுவைமிக்க தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, நடுவருக்கு பரிமாறி அவர் நாவில் எச்சில் ஊறவைத்து விட்டார். இதன் மூலம், 45 லட்ச ரூபாய் ரொக்க பரிசை வென்ற கார்டோஸ், இந்த பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவரது நினைவாக இந்த நன்கொடையை அளித்துள்ளார் கார்டோஸ்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=273593

கருத்துகள் இல்லை: