சனி, 9 ஜூலை, 2011

கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு- மு.க.அழகிரியின் இலாகா மாற்றப்படும்?

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து திமுக தலைவர்கள் கைதாகி வரும் நிலையில், திமுக கடும் அதிருப்தியிலும், விரக்தியிலும் மூழ்கியுள்ள நிலையில் அதை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

இன்று காலை சென்னை வந்த பிரணாப் முகர்ஜி, கோபாலபுரம் வீட்டிற்கு சற்று முன்னர் வருகை தந்தார். பின்னர் அவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது 2ஜி விவகாரத்தில் பதவி விலகிய தயாநிதி மாறனும் உடன் இருந்தார்.

தயாநிதி மாறன் விலகிய பின்னர் கருணாநிதியை, பிரணாப் முகர்ஜி சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது 2ஜி விவகாரத்தில் காங்கிரஸின் நிலை, சிபிஐ விசாரணையில் அது தலையிட முடியாத சூழலில் இருப்பது போன்றவை குறித்து பிரணாப் முகர்ஜி விளக்கியதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் இலாகா குறித்தும் பிரணாபுடன், கருணாநிதி பேசியதாகத் தெரிகிறது. இந்தத் துறையை அழகிரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இலாகா மாற்றம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

2ஜி விவகாரம் பெரிதாக வெடித்த பின்னர், குறிப்பாக கனிமொழி கைது, தயாநிதி மாறன் ராஜினாமா ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு முக்கிய காங்கிரஸ் மேலிடத் தலைவர் ஒருவர் கருணாநிதியை தேடி வந்து சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது நினைவிருக்கலாம்.

காங்கிரஸ் கட்சி திடீரென இறங்கி வருவதற்கு முக்கியக் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. கோவையில், திமுக தனது செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களைக் கூட்டியுள்ளது. அப்போது காங்கிரஸுடனான கூட்டணி குறித்து அது முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு அது போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால்தான் பிரணாப் முகர்ஜியை, சோனியா காந்தி சென்னைக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/09/pranab-mukherjee-meet-karunanidhi-today-aid0091.html

கருத்துகள் இல்லை: