சனி, 9 ஜூலை, 2011

திங்கள்கிழமை அமைச்சரவை மாற்றம்- நிதி, உள்துறை, வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் மாற்றமில்லை

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் திங்கள்கிழமை மாறுதல் செய்யவுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.

அமைச்சரவை மாற்றத்தின்போது நிதித்துறை, உள்துறை, வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இதனால், நிச்சயம் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதவி தப்புகிறது. அதேசமயம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு ஆப்பு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியுடன் இன்று பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தினார். அதன் விவரத்தை அவர் பிரமதருக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இதையடுத்து சோனியாவை சந்தித்தார் பிரதமர்.

திமுக சார்பில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனரா என்பது இதன் மூலம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

நீண்ட நாட்களாகவே அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் திடீரென தெலுங்கானா விவகாரம் குறுக்கிட்டு விட்டதால் அது தள்ளிப் போடப்பட்டதாக தகவல்கள் கூறின. இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் திங்கள்கிழமை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த அமைச்சரவையில் ராசா, தயாநிதி மாறனுக்குப் பதிலாக புதிதாக 2 அமைச்சர்களை திமுக அறிவிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்துத்தான் இன்று கருணாநிதியுடன் பிரணாப் பேச்சு நடத்தினார்.

ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அவருக்குப் பதில் புதிய அமைச்சரை நியமிக்க வேண்டியுள்ளது. இது போக சில அமைச்சர்கள் நீக்கப்படலாம், சிலரின் துறைகள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

எப்படி இருப்பினும் நிதித்துறை, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டும் மாற்றப்பட மாட்டார்கள். மற்ற அமைச்சர்கள் பலர் மாற்றப்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மாற்றப்படக் கூடும்.

ஆனால் இதை மொய்லி மறுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தொடர்ந்து நீடிப்பேன் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்றார்.

அதேபோல கபில் சிபல் வசமிருந்து தொலைத் தொடர்பு துறை எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், மனித வளத்துறை அமைச்சராக அவர் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சோனியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் இறுதி செய்யவுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/09/cabinet-reshuffle-likely-on-monday-aid0091.html

கருத்துகள் இல்லை: