வெள்ளி, 8 ஜூலை, 2011

இந்து சமுத்திரத்தில் தனக்கான செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் சீனா - அமெரிக்க அறிக்கை

இந்து சமுத்திரத்தில் தனக்கான செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் சீனாவானது 2005ம் ஆண்டிலிருந்து சிறிலங்காவிற்கு பெருமளவிலான நிதி மற்றும் ஏனைய உதவிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சார் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் வடக்குப் புறத்தே சீனா தனது கடல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'முத்து மாலை' என்கின்ற தனது மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே தற்போது சீனாவானது சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைக் கட்டியெழுப்பி வருவதாக சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர்' என காங்கிரஸ் சார் ஆராய்ச்சி சேவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அபிவிருத்திகளை சீனா மேற்கொள்வதானது இந்து சமுத்திரத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக சீனா எடுத்துக் கொண்டுள்ள முயற்சியாகும் என இந்தியப் பாதுகாப்பு திட்டமிடலாளர்கள் கருதுவதாக, அமெரிக்க காங்கிரஸ் சார் ஆராய்ச்சி சேவையினால் வெளியிடப்பட்டுள்ள எட்டுப்பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாகவே சீனாவானது சிறிலங்காவின் தென்கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது.

"பாகிஸ்தானின் Gwadar துறைமுகம், பங்களாதேசின் சிற்றகொங்க் துறைமுகம், பர்மாவின் சிற்வே துறைமுகம் போன்றவற்றின் அபிவிருத்திக்காகவும் சீன நாடானது பெருந்தொகையான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. மே 2009ல் விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் தோற்கடித்த போது, அது பல யுத்த மீறல்களை மேற்கொண்டுள்ளதாக மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது தமது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன" எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ல் சிறிலங்கா இராணுவப் படைகளால் விடுதலைப் புலிகள் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த தலைவராகவும் மிகப் பலமான ஆதரவு பெற்ற ஒருவராகவும் விளங்குகின்றார் எனவும் அமெரிக்காவிலிருந்து வெளியாகியள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவம் பல யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்கின்ற அனைத்துலக சமூகத்தின் கண்டனங்களை ஏற்றுக் கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா மீதான யுத்த மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற அனைத்துலக சமூகத்தினதும், மனித உரிமை அமைப்புக்களின் வேண்டுகோள்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள இரு உறுப்பு நாடுகள் ஏற்க மறுத்துள்ளதால் இதனை நிறைவேற்ற முடியாத நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நாவின் பாதுகாப்புச் சபை வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலையிலிருந்தும், பாதுகாப்புச்சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள சீனா, ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் சிறிலங்கா விடயத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையீடு செய்வதனை எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக சமூகம் ஆகியன சிறிலங்கா அரசாங்கத்திற்கெதிராக குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் நிலையில் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கு முன்னரைவிடப் பெருமளவிலான ஆதரவு கிடைப்பதற்கான எதிர்விளைவை ஏற்படுத்தி விடலாம் எனவும் அவதானிகள் சிலர் கருதுவதாக அமெரிக்க காங்கிரஸ் சார் ஆராய்ச்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 கருத்து:

dravidan சொன்னது…

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

>>> இதோ கடவுள். கடவுளை சொர்க்கத்தை காப்பாற்றுவோம். <<<<

..