திங்கள், 25 ஜூலை, 2011

இலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திரிகா!

கொழும்பு: இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

இந்த வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம் என்று கூறியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது பேச்சின் இறுதிப் பகுதியில், சமீபத்தில் உலகை அதிர வைத்த தமிழினப் படுகொலை குறித்த இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன் தான், சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்றார் அவர்.

இதைக் கூறும்போது கண் கலங்கிய சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
http://www.dinamalar.com/News

கருத்துகள் இல்லை: