புதன், 27 ஜூலை, 2011

சென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெடிகுண்டு சிக்கியது

 சென்னையில், நகைப்பட்டறை நடத்தியவர் வீட்டு மொட்டைமாடியில், பிளாஸ்டிக் பந்தில் அடைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு சிக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுதாகரன். நகை பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வீட்டின் மாடிக்குச் சென்ற அவர், பக்கத்து வீட்டை ஒட்டிய சுவரில் பிளாஸ்டிக் பந்து ஒன்று கிடப்பதை கண்டார்.

அதை கையில் எடுத்த சுதாகர் உற்றுபார்த்த போது, பந்தின் ஒருமுனையில் திரியும் சுற்றிலும் காகிதமும் சுற்றி இருந்தது. வெடிகுண்டாக இருக்குமோ என பயந்த அவர், அதை உடனே யானைக்கவுனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து போலீஸ் நிலையத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், பந்தை சோதனை செய்தனர். காலி ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்திற்குள், பட்டாசு தயாரிப்பில் பயன்படும் வெடிமருந்துகள் நிரப்பி திரி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயல் இழக்கச் செய்ய, எடுத்துச் சென்றனர்.

நாட்டு வெடிகுண்டு குறித்து, நிபுணர்கள் கூறும்போது, சில மாதங்களுக்கு முன் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியிலும், மயிலாப்பூரில் ஒரு வீட்டிலும், இதேபோன்ற ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்து மூலம் தயாரித்த வெடிகுண்டுகளை எடுத்துள்ளோம், என்றனர்.

யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: