சனி, 23 ஜூலை, 2011

வடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்

வடக்கிலுள்ள 20 உள்ளூராட்சி சபைகள் அடங்கலாக, 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று சிறிலங்காவில் நடைபெறவுள்ளது.

01 மாநகரசபை, 09 நகரசபைகள், 55 பிரதேசசபைகளின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடையும்.

தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகளைத் தடுக்க நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

875 உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தெரிவு செய்ய நடைபெறும் இந்தத் தேர்தலில் 2,630,985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 5619 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வடக்கில் 20 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபியுடன் இணைந்து இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது.
மாலை 4 மணியளவில் வாக்களிப்பு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் மாவட்ட செயலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 8 மணியளவில் ஆரம்பிக்கப்படும்.

அதற்கு முன்னதாக அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படமு. ஆனால் இம்முறை அஞ்சல்வாக்களிப்பு முடிவுகள் தனியாக வெளியிடப்படாது என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முதலாவது தேர்தல் முடிவு இன்றிரவு 10 மணியளவில் வெளியாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அனைத்து முடிவுகளும்நாளை அதிகாலைக்கு முன்பாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் ஒளிப்படம் எடுப்பதற்குத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையாளர், எந்தவொரு ஊடகத்திலும் வாக்களிக்கும் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானால் குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

வடக்கில் நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அதிகளவிலான கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தியுள்ளன.

இன்று நடைபெறும் தேர்தலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த 25ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்களை சிறிலங்கா காவல்துறை பணியில் அமர்த்தியுள்ளது.

25 ஆயிரம் காவல்துறையினரும், 500 சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை திணைக்களம் கூறியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110723104334

கருத்துகள் இல்லை: