செவ்வாய், 26 ஜூலை, 2011

இலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலிதாவைச் சந்தித்த பின் சீமான் பேட்டி

சென்னை: ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.

மேலும் நடிகை விஜயலட்சுமி தன்மீது கொடுத்துள்ள புகார் குறித்த விசாரணையை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அந்தப் பிரச்சாரத்தின் பலனாக காங்கிரஸ் வெறும் 5 இடங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

அதிமுக பதவி ஏற்ற கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சில கோரிக்கைகளை முன் வைத்தது.

தமிழரைக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை, இலங்கை மீதான சர்வதேச விசாரணை, தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழருக்கு நல்ல வசதிகள் செய்து தரவேண்டும் போன்ற தீர்மானங்களை சட்டசபையில் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டது நாம் தமிழர் கட்சி.

சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினார் ஜெயலலிதா. இலங்கைக்கு எதிராக மூன்று முக்கியத் தீர்மானங்களை சட்டமன்றத்தில் தானே முன்மொழிந்தார் ஜெயலலிதா. அத்துடன் ஈழத் தமிழர் முகாம்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கூட்டம் மூலம் நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.15 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தார் சீமான். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், இலங்கை தமிழர் மீது முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும் நேரில் நன்றி தெரிவிக்கவே இந்த சந்திப்பு என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு:

பின்னர் நிருபர்களைச் சந்தித்த போதும் இதனைத் தெரிவித்தார் சீமான். மேலும் அவர் கூறுகையில், "இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காட்டி வரும் அக்கறை, உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கவே அவரை இன்று சந்தித்தேன்.

கச்சத் தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தேன். இலங்கை பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்போம்," என்றார்.

அவரிடம் நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நான் முதல்வரைச் சந்திக்கவில்லை. நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரை சட்டப்படி சந்திக்கத் தயார்," என்றார்.

முதல் சந்திப்பு

சீமான் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தபோதும், ஒரு முறை கூட ஜெயலலிதா நேரில் சந்திக்கவில்லை. தாமாக முன்வந்துதான் இந்த ஆதரவை வழங்கினார். ஜெயலலிதாவை நேரில் சந்திப்பீர்களா என்று கேட்டபோது, நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே நேரில் சந்திக்கவில்லை, என்று பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்திருந்தார்.

இப்போதுதான் அவர் முதல் முறையாக, அதுவும் முதல்வர் பதவி ஏற்றபிறகு ஜெயலலிதாவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: