செவ்வாய், 19 ஜூலை, 2011

உருவாகிறது கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக கவுன்சில்- சிதம்பரம் முன்னிலையி்ல ஒப்பந்தம் கையெழுத்து

கொல்கத்தா: கூர்க்காலாந்து பிராந்திய கவுன்சிலை உருவாக்க அனைத்துத் தரப்பும் ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அதுதொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையி்ல் கையெழுத்தானது.

இதன் மூலம் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் கூர்க்கா சமுதாயத்தினர் அதிகம் வாழும் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை தனியாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் தீர்வு ஏற்பட்ட பாடில்லை.

கடந்த இடதுசாரி ஆட்சியின்போது டார்ஜீலிங் கூர்க்கா மலை கவுன்சில் அமைக்கப்பட்டது. இருப்பினும் பிரச்சினை தீரவில்லை. இந்த நிலையில் மமதா பானர்ஜி தலைமையில் அமைந்துள்ள அரசு புதிய தீர்வை முன்வைத்தது. அதாவது டார்ஜிலிங் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கூர்க்கா பகுதிகளையும் இணைத்து கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக கவுன்சில் அமைப்பது என யோசனை தெரிவித்தார் மமதா.

இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு, மேற்கு வங்க அரசு, கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா அமைப்பு ஆகியவை கையெழுத்திட்டன.

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மமதா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் திணேஷ் திரிவேதி, மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் முகுல் ராய், டார்ஜிலிங் தொகுதி பாஜக எம்.பி. ஜஸ்வந்த் சிங், கூர்க்கா ஜன் சக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை இணை செயலாளர் கே.கே.பதக், மேற்கு வங்க மாநில உள்துறை செயலாளர் கவுதமா, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் ரோஷன் கிரி ஆகியோர் கையெழுத்திட்டார்கள்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/19/historic-pact-paves-way-peace-darjeeling-hills-aid0091.html

கருத்துகள் இல்லை: