செவ்வாய், 12 ஜூலை, 2011

ஸ்ரீரங்கம் கோவிலில் பல இடங்களில் பொக்கிஷம்? : மீண்டும் முருங்கைமரம் ஏறும் "புதையல்' வேதாளம்

திருச்சி : ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில், பல இடங்களில் புதையல் இருக்கலாம் என்ற தகவல், விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இருந்த, ரகசிய பாதாள அறைகள் திறக்கப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோல, தமிழகத்தில் பழமை வாய்ந்த கோவில்களில் பொக்கிஷ குவியல்கள் இருக்கலாம் என்ற கருத்து, ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பொக்கிஷங்கள் இருக்கலாம் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியில், பொக்கிஷ குவியல் இருப்பதாகவும், அவற்றை மீட்க வேண்டும் என்றும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஓய்வுப்பெற்ற சீனியர் மேலாளர் கிருஷ்ணமாச்சாரியார், ஆதாரத்துடன் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். அதைத் தொடர்ந்து, "ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பல இடங்களில், பொக்கிஷ குவியல்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம்' என, கோவில் பட்டாச்சாரியார்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவில் பட்டாச்சாரியர்கள் சிலர் கூறியதாவது: பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே ஸ்ரீரங்கம் கோவில் அமைக்கப்பட்டு, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்தில் படிப்படியாக கட்டப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. மன்னர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பரவி பொருளீட்டிய பெரிய தனவந்தர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு, அரிய வகையான தங்கம், வைர, வைடூரிய நகைகள், பொருள்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுல்தான்கள், பிரெஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பினால், கோவிலில் இருந்த ஏராளமான பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மீதமுள்ள பொருட்களை, கோவில் ஸ்தலத்தார் அரும்
பாடுபட்டு காப்பாற்றினர். அன்னியர்களின் கையில் அரங்கனின் சொத்துக்கள் சிக்காமல் காக்க, பல்வேறு உபாயங்களை கையாண்டனர். அதனால், ஸ்ரீரங்கம் கோவிலில் பல இடங்களில் புதையல் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஸ்ரீரங்கம் மூலவர் சன்னிதியில், மூலவரின் தலைப்புறப் பகுதியின் கீழே தரையில் இரண்டடி அகலம், இரண்டடி நீளத்துக்கு பள்ளம் ஒன்று உள்ளது. அப்பள்ளம் சதுரக்கல் ஒன்றினால் மூடப்பட்டுள்ளது.
அதேபோல, அகோபில மடம் தசாவதாரம் சன்னிதியில், இரண்டடிக்கு இரண்டடி உள்ள பள்ளம் சதுரக்கல்லால் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளம் மூலம் மூலவர் சன்னிதிக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது. உண்மையில் இது சுரங்கப் பாதையா அல்லது இங்கு விலை மதிப்பில்லாத பொக்கிஷக் குவியல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, சோதனை செய்யப்பட வேண்டும். அடுத்ததாக, பகல்பத்து அர்ச்சனை மண்டபத்தில் உள்ள சேரகுலவல்லி சன்னிதியிலும் இரண்டடி அகலம், இரண்டடி நீளத்தில் பள்ளம் உள்ளது. சதுரக் கல்லால் மூடப்பட்டிருக்கிறது. புதையல் உள்ளதாக சந்தேகப்படும் இடங்களில், கருவறை மற்றும் சுவாமிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நவீன முறையில் ஆராய்ச்சி செய்யலாம். இதன்மூலம் ஸ்ரீரங்கம் கோவில் புகழ் மேன்மேலும் பெருகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதையல் சந்தேகங்கள் குறித்து, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் கூறியதாவது: தமிழகத்தில் கல்வெட்டு ஆராய்ச்சியில் சிறந்தவர்கள் சதாசிவ பண்டாரத்தார் மற்றும் ராசமாணிக்கத்தார். ராசமாணிக்கத்தார் மகன் கலைக்கோவன். 2009ம் ஆண்டு முன் கருடாழ்வார் சன்னிதியில் புதையல் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவில் இருந்த கலைக்கோவன், மூன்று நாள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார். ஆய்வின் இறுதியில், "புதையல் இல்லை' என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்தார். தற்போதும் அதே அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். தற்போது எழுந்துள்ள சந்தேகத்துக்கு தீர்வு காண, தொல்லியல் துறைதான் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மூலவர் சன்னிதி உள்ளிட்ட இடங்களில் பள்ளம் இருப்பது குறித்து எனக்கு தெரியாது. மூலவர் சன்னிதியில், 16 பட்டாச்சாரியர்கள் உள்ளனர். ஒருவேளை அவர்கள் சொல்லியிருந்தால், உண்மையாக இருக்கலாம். மூலவர் சன்னிதி உட்பட அனைத்து சன்னிதியிலும், கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள் செல்லலாம். இன்னும் இரண்டாண்டில் ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள் நேரிலேயே பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அறிஞருக்குள் சர்ச்சை : கல்வெட்டு ஆராய்ச்சியில் நிபுணரான கலைக்கோவன், "கருடாழ்வார் சன்னிதியில் புதையல் இல்லை' என்று மறுத்துள்ள நிலையில், அதேத்துறையில் நிபுணராக விளங்கும் குடவாயில் பாலசுப்ரமணியன், "கருடாழ்வார் சன்னிதியில் புதையல் இருக்க வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
புதையல் குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், "அதிநவீன கருவிகளை கொண்டு அங்கு புதையல் இருக்கிறதா? இல்லையா? என்பதை சன்னிதியில் எவ்வித பாதிப்பும் இன்றி உறுதிப்படுத்த முடியும்' என்கின்றனர் பக்தர்கள்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274085

கருத்துகள் இல்லை: