வெள்ளி, 8 ஜூலை, 2011

விநியோகஸ்தரை பிடித்து வைத்து தாக்கியதாக சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு- கைது

சென்னை: சேலம் விநியோகஸ்தர் சண்முகவேல் என்பவரை பிடித்து வைத்து தாக்கியதாக சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது இன்னொரு வழக்கைப் பதிவு செய்த போலீஸார் அதில் அவரைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் சக்சேனா மீதான வழக்குகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் விநியோகஸ்தரான செல்வராஜ், சேலம் பகுதிக்கான விநியோக உரிமையை தனக்குத் தருவதாக சக்சேனா கூறியிருந்தார். இதற்காக ரூ. 1.25 பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார்.

இதைக் கேட்டபோது தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரை விசாரித்த போலீஸார் ஹன்ஸ்ராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சக்சேனாவை 2 நாள் காவலில் எடுத்த போலீஸார் நேற்று விசாரணை முடிவடைந்ததும், சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மேலும் 2 நாள் காவல் கோரப்பட்டது. அதற்கு தான் போலீஸ் காவலில் போக விரும்பவில்லை என்று சக்சேனா கூறவே அதை ஏற்று போலீஸ் காவலை அனுமதிக்க மாஜிஸ்திரேட் சவுமியா ஷாலினி மறுத்தார்.

இதையடுத்து சக்சேனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே ஜாமீன் தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைக்கு தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்ற பட விநியோகஸ்தரை தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக பிடித்து வைத்து சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் தாக்கியதாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் அய்யப்பனையும் போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இருவரையும் இன்றைக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவும், அய்யப்பனும் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
http://thatstamil.oneindia.in/movies/news/2011/07/another-case-slapped-on-hansraj-saxena-aid0091.html

கருத்துகள் இல்லை: