வெள்ளி, 22 ஜூலை, 2011

ஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிறிலங்கா

தமிழ்நாட்டுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மேற்கொண்ட பயணம் குறித்தும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்புக் தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கம் கலக்கமடைந்திருந்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரே இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் ஹிலாரியின் இந்தப் பயணம் தாம் எதிர்பார்த்தது போன்று அச்சம் நிறைந்தாக இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனின் சென்னைக்கான பயணமும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பும் சிறிலங்கா அரசு அஞ்சியது போன்று மோசமானதாக இருக்கவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா – ஹிலாரி சந்திப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், கடுமையான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலர் வெளியிடுவார் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தாம் எதிர்பார்த்தது போன்று இந்தச் சந்திப்பு மிகமோசமானதாக அமையவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானதும், சிறிலங்கா அரசாங்கம் பதறியடித்துக் கொண்டு அதுபற்றி இந்திய அரசாங்கத்திடம் விசாரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு அப்படியான சந்திப்பு இல்லையென்று கூறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.puthinappalakai.com/view.php?20110722104330

கருத்துகள் இல்லை: