வெள்ளி, 1 ஜூலை, 2011

இந்திய கடற்படைக்கு இலங்கையிடமிருந்து அதிவேக படகுகள் வாங்க முடிவு

இந்தியக் கடற்படைக்கு இலங்கையிடமிருந்து எண்பது அதிவேக படகுகள் வாங்க இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியா- இலங்கை இடையேயான இராணுவ ஒத்துழைப்பு குறித்த உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியக் கடலோரக் காவல் படையின் பயன்பாட்டுக்காகவே இந்த 80 அதிவேகப் படகுகளும் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா கொள்முதல் செய்யவுள்ள இந்த 80 அதிவேகப் படகுகளின் விலை சர்வதேச சந்தையில் அறுபத்தியேழு மில்லியன் டாலர்களாகும்.

இலங்கை அரசின் முதலீட்டு வாரியத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள "சோலாஸ் மரைன் லங்கா பிரைவேட் லிமிடெட்" என்ற துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமே இந்த படகுகளை தயாரிக்கிறது.

இந்த படகுகள் மணிக்கு ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் பயணம் செய்யக் கூடியவையாகும். அத்துடன் ஐ.எஸ்.ஓ. சர்வதேச தரச் சான்றிதழையும் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுற்ற பின் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இலங்கை ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை கைகொடுத்து தூக்கிவிடும் நோக்கில் இந்த் ஒப்பந்தத்தை இந்தியா செய்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

இலங்கைக்கு எதிராக இந்தியாவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இந்திய மத்திய அரசாங்கம், இலங்கையிடமிருந்து படகுகளை வாங்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1107/01/1110701076_1.htm

கருத்துகள் இல்லை: