வெள்ளி, 15 ஜூலை, 2011

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணம் யார் என தெரியாமல் திணறல்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து, மகாராஷ்டிர போலீசாரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தாலும், குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். குண்டுகளை வெடிப்பதற்காக பயன்படுத்திய ஸ்கூட்டர் ஒன்றைத் தவிர வேறு எந்தத் தடயமும் கிடைக்காததால், போலீசார் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். குண்டு வெடிப்பு நடந்த மூன்று இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என, தேடி வருகின்றனர். கடந்த 13ம் தேதி, மும்பை நகரின் முக்கிய பகுதிகளான தாதர், ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 18 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்து 48 மணி நேரம் ஆகியும், புலனாய்வில் எந்தவொரு முக்கிய தடயங்களும் இதுவரை சிக்கவில்லை. குண்டு எங்கிருந்து வந்தது, யார் கொண்டு வந்தது, இந்த நாச வேலையைச் செய்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசாரும், மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே எந்தவொரு உளவுத் தகவலும் கிடைக்கவில்லை' என, கூறியிருந்தார். இந்நிலையில், டில்லியில் நேற்று உள்துறை அமைச்சக செயலர் ஆர்.கே.சிங் பேட்டியளித்தார். அப்போது அவர், "மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, ஒரு ஆக்ட்டிவா ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஸ்கூட்டரில் வைத்து தான் குண்டுகளை சதிகாரர்கள் வெடிக்கச் செய்திருக்கின்றனர்' என்றார். குண்டுகள் வெடித்த மூன்று இடங்களில் ஒன்றான, ஜவேரி பஜாரில் தான், ஸ்கூட்டர் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது பற்றி மேலும் சிங் கூறியதாவது: குண்டு வெடிப்பு நிகழ்ந்த மூன்று இடங்களிலுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் மிக முக்கிய தடயங்களாக உள்ளன. இதிலிருந்து, மிக முக்கியமான துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சம்பவம் நடந்த அன்று மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணி வரை, யாரெல்லாம் அந்த பகுதிகளில் வந்து போய் உள்ளனர் என்ற விவரங்கள் ஆராயப்படுகின்றன. அதில் தெரியும் சந்தேகத்துக்குரிய புதிய வெளிநபர்கள் பற்றியும், அவர்களது இருப்பிடம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. உள்ளூர் ஆட்களைக் கொண்டு சரிபார்க்கப்பட்டு இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது மிகவும் நீளமான ஆராய்ச்சி தான். இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மொத்தம் 11 சி.டி.,க்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து, வெளிநாடு ஒன்றில் இருந்து இ-மெயில் கடிதம் வந்துள்ளது. அது பற்றியும் புலனாய்வு தீவிரமாக நடக்கிறது. விரைவில் இதில் போதிய அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு சிங் கூறினார்.

உள்துறை செயலர் கூறும் வெளிநாடு என்பது, பாகிஸ்தான் என்று தான் கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்புமே பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இது பற்றி சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், அது பற்றி இப்போதைக்கு வெளியில் கூற வேண்டாமென தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=275975

கருத்துகள் இல்லை: