சனி, 2 ஜூலை, 2011

இலங்கைப் பிரச்சனை: பிரதமர் மன்மோகன் சிங் போடும் இரட்டை வேடம்

நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.

அதே நேரத்தில் மக்களின் பிரச்சனைகள் என்று வரும்போதும், தனது அமைச்சரவை சகாக்களின் ஊழல் என்று வரும்போதும் அதற்கெல்லாம் தான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது என்று காட்டிக்கொள்வதிலும் அபாரத் திறன் கொண்டவர் நமது பிரதமர். தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் இந்த பிரதமரின் ஆட்சியில்தான் அதிகபட்ச ஊழல் நடந்துள்ளது என்பது மட்டுமின்றி, இந்தியாவின் வளங்கள் கொள்ளை போய்க்கொண்டிருப்பதும் தடையற்று நடந்துகொண்டிருக்கிறது. இவை யாவற்றையும் மறைக்க இவர் பயன்படுத்தும் ஒரே விடயம் ‘இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது’ என்று புள்ளி விவரத்தை வெளியிடுவதுதான்.

நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்கிறீர்கள், ஆனால் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கிறது, அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி (பணவீக்கம்) குறைந்துகொண்டே போகிறதே என்று வினவினால், ‘இவற்றையெல்லாம் ஒரே நாளில் கட்டுப்படுத்தக் கூடிய மத்திரக்கோல் என்னிடம் இல்லை’ என்று சாமர்த்தியமான பதிலைக் கூறுவார். வார்த்தைகளைப் பயன்படுத்தி வாய்ப் பந்தல் போடுவதிலும், பேச வேண்டிய வேளையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் கமுக்க அமைதி காப்பதிலும் இவர் வெளிப்படுத்தும் இராஜதந்திரம் பொருள் நிறைந்தது.

இப்படிப்பட்ட பிரதமர்தான், இதற்குமேல் அடிக்கடி மக்களிடம் பேச ‘சில’ ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அவர்கள் கேட்ட ஒரிரு வினாக்களுக்கும் பதிலளித்து தான் ‘செயல்படும்’ பிரதமர்தான் என்று நிரூபித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார். பிரதமரின் வாய் ஜாலத்தை அறிந்திராத தமிழர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் தலை சுற்றி நிற்கின்றனர்.

“இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அந்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவு மக்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார். அப்படியானால் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசால் சம உரிமையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்ற இந்த 7 ஆண்டுகளில் செய்தது என்ன?

கடந்த மாதம் 10, 11ஆம் தேதிகளில் இலங்கை சென்ற தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் சென்றக் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசியது. இந்தச் சந்திப்பின்போது அந்நாட்டு அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ், இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோரும் இருந்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்சங்கர் மேனன், “இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று ராஜபக்சவை வலியுறுத்தியதாகக் கூறினார். ஆனால், நேற்று முன் தினம் கொழும்புல் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, “சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தன்னை நிர்பந்திக்கவில்லை” என்று கூறினாரே! இதுதான் மன்மோகன் அரசு ‘தொடர்ந்து வலியுறுத்துவ’தன் இலட்சணமா?

“விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது. ஆனால் அதற்குப் பிறகும் தமிழர் பிரச்சனை மறையவில்லை” என்று மன்மோகன் கூறுகிறார். அதாவது மன்மோகன் அரசு எதிர்பார்த்தது: விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தமிழர் பிரச்சனையும் அழிந்துவிடும் என்பதுதானே? அதற்காகத்தானே அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முத்திரைக்குத்த வைத்து, அதற்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ‘எல்லா விதத்’திலும் உதவியது? ஆனால் புலிகள் அழிந்துவிட்டார்கள், பிரச்சனை அழியவில்லை! இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கமென்றால், அதனை உறுதி செய்துக்கொண்டு பிறகு ராஜபக்ச நடத்திய போருக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசின் நோக்கம் வேறு. ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ‘முடிக்க’ சிங்கள இனவெறி ராஜபக்ச அரசுக்கு உதவி, அதன் மூலம் அந்நாட்டின் ‘நட்பை’ (சீனாவை புறந்தள்ள வைத்து) உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

“நீங்கள் வேறு எந்த நாட்டையும் நாட வேண்டாம், எல்லா உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்” என்றல்லவா...
இரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தமிழினத்தை அழிக்க ராஜபக்சவுக்கு உதவினார்கள். இந்த உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே இலங்கைக்கு அரசுக்கு எதிராக பன்னாட்டு நடவடிக்கைகளை எதிர்க்கிறது இந்திய அரசு.

“தமிழர்கள் சுய மரியாதையுடனும், சம உரிமையுடைய குடிமக்களாகவும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான புதியதொரு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்” என்பதே இந்திய அரசின் விருப்பம் என்றால், அதனை ராஜபக்ச நடத்திய போருக்கு உதவியதன் மூலம் எவ்வாறு சாதிக்க நினைத்தீர்கள்? இன்றைக்கு போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே, அந்த இலக்கில் என்ன முன்னேற்றம் கண்டிருக்கிறீர்கள்?

ஆனால், அது “அவ்வளவு எளிதல்ல” என்று கூறியுள்ள மன்மோகன் சிங், “சிறிலங்க மக்கள் தொகையில் சூடான தலைகள் இருக்கின்றனர். சிங்கள இனவாதம் என்பது உண்மையே” என்று கூறுகிறார். என்னே விநோதம்! இலங்கையின் அரசியல் என்பதே சிங்கள பெளத்த இனவாதம் என்பதால்தானே அங்கு தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டார்கள்? அதற்கு எதிராக அவர்கள் சாத்வீக வழியில் போராடி தோற்ற நிலையில்தானே, தங்களை அழிக்கும் சிங்கள இனவெறி அரசிற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? இதைத்தானே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒப்புக்கொண்டு, அப்படி ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் குழு அனைத்திற்கும் ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்தார். இந்த உண்மை தெரிந்தும், தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்கு எல்லா வித்திலும் உதவியது ஏன்? இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என்று ராஜபக்ச கூறியதனாரே, அதன் பொருள் என்ன? இலங்கையில் இந்தியா போர் நடத்த என்ன அடிப்படை இருக்கிறது?

மன்மோகன் சிங் அரசின் நோக்கம், தமிழர்கள் அங்கு சம உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதல்ல. தமிழர் நலனை அது உண்மையுடன் நேசித்திருந்தால், “இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் அங்குள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும்” என்கிற வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட நிலையை கடைபிடித்திருக்கும். அதையே அந்நாட்டிடம் வலியுறுத்தியிருக்கும், போருக்கு உதவியிருக்காது. அதைச்செய்யாமல், தமிழர் பிரச்சனையை பகடையாக்கி, அப்பிரச்சனையை அழிக்க இலங்கை இனவாத அரசுக்கு உதவி, அதன் மூலம் அந்நாட்டின் நட்பைப் பெற வேண்டும் என்றுதான் மன்மோகன் அரசு திட்டமிட்டது. அதனால்தான் அது இரண்டரை ஆண்டுக்காலத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலைக்குத் துணைபோனது. டெல்லியில் இருக்கும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களிடம் பேசிய இந்த விடயத்தை இங்கு தமிழகப் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தால் இந்தக் குட்டு வெளிப்பட்டிருக்கும். ஆனால் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு வசதியாக உண்மையை மறைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

இலங்கை அரசுடன் இணைந்து தமிழினப் படுகொலை செய்த மன்மோகன் சிங் அரசு, சர்வதேசத்தால் குற்றம்சாற்றப்படும் இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சியில் இன்றுவரை இரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை உறுதி செய்யவே சிங்சங்கர் மேனன் தலைமையிலான குழு கொழும்பு சென்றது. அவர்கள் பேசியது வேறு, பேசியதாகச் சொன்னது தமிழர் பிரச்சனையை. அந்தக் கெட்டிக்காரன் பொய்தான் இரண்டு வாரத்தில் வெளிப்பட்டுவிட்டது.

ஆனால், இன்றைக்கு இவ்வளவு அக்கறையோடு ஈழத் தமிழர் பிரச்சனையை மன்மோகன் சிங் பேசக் காரணம், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மரண அடி. இதே நிலை நீடித்தால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூடத் தேறாது என்பதை புரிந்துகொண்டு, வெற்றி பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க.வை தன் பக்கம் இழுத்துக்கொண்டு தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்ற எடுத்துள்ள முயற்சி.


அதனால்தான், வேறு எந்த மாநில முதலமைச்சருக்கும் வழங்காத வரவேற்பை அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றபோது வழங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த இல்லத்தில் இருந்து புதிய தார் சாலை போட்டு, காரை அனுப்பி அழைத்துவரச் செய்து சந்தித்துள்ளார்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் செயல்பட வேண்டும். டெல்லிக்காரன் கொடுக்கும் மரியாதையெல்லாம் காரியத்தில் கண் வைத்து செய்யப்படுவது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை ஊழலைக் காட்டி வளைத்து எப்படி தமிழினப் படுகொலையை முடித்தார்களோ அதேபோல் இப்போதும் ஒரு திட்டத்தைத் தீட்டி ஈழத் தமிழனின் உரிமைகளுக்கு சாவு மணி அடித்து விடுவார்கள்.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1107/01/1110701081_2.htm

கருத்துகள் இல்லை: