திங்கள், 25 ஜூலை, 2011

தி.மு.க., வினர் மீது கை வைத்தால்! கோவையில் கருணாநிதி ஆவேசம்

கோவை:""தி.மு.க.,வினர் மீது கை வைத்தால் என்னவாகும்'' என்று இக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்து கருணாநிதி ஆவேசத்துடன் பேசினார்.தி.மு.க., வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், 2050 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தி.மு.க.,வினர் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அ.தி.மு.க., வின் அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் நிறைவில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தி.மு.க.,வினர் மீது அ.தி.மு.க., அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க., மீது கை வைத்தால் என்னவாகும்...? இதை நான் வன்முறையாக சொல்லவில்லை.மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது; இதை நான் அறிவுரையாகத்தான் சொல்கிறேன்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., விலக வேண்டும் என சில பத்திரிகைகள் விரும்புகின்றன; அதற்கேற்ப அவை செயல்பட்டு வருகின்றன. காங்கிரசுடனான கூட்டணி தொடரும். காங்கிரஸ் கூட்டணிக்கு சில காங்கிரசாரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நாங்கள் கூட்டணியை தேடி அலைபவர்கள் அல்ல. தி.மு.க., வலிமையான கட்சி; தன்னைத்தானே நிலை நிறுத்திக்கொள்ளும் பலம் உண்டு.

காங்கிரசுடன் உறவு தொடரும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தாலும், தி.மு.க.,வுக்குள்ள ஓட்டு வங்கி குறையவில்லை. மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, தி.மு.க.,வினர் மீது தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை சரியல்ல.இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசத்துடன் பேசினார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: