செவ்வாய், 26 ஜூலை, 2011

போலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்!

சென்னை: சினிமா விநியோகஸ்தரை பண மோசடி செய்த வழக்கில், கே.கே. நகர் காவல் நிலையத்தில் சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் இன்று ஆஜராவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை.

வெளிநாட்டில் உள்ள அவர் இதுவரை சென்னைக்கு திரும்பவில்லை என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் டி.கே. செல்வராஜ். தீராத விளையாட்டு பிள்ளை திரைப்பட விநியோகம் தொடர்பாக ரூ. 82.53 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சன் குழும நிர்வாகி சக்சேனா மீது கடந்த ஜூலை 3-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சக்சேனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த புகார் தொடர்பாக, சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறனையும் விசாரிக்கும் வகையில் அவருக்கு போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

அதில், ஜூலை 13-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஆஜராஜ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் போலீஸில் ஆஜராகவில்லை.

அவரது சார்பில் காவல் நிலையத்துக்கு வந்த வழக்கறிஞர்கள் கலாநிதிமாறன் காவல் நிலையத்தில் ஆஜராக ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் கேட்டனர். போலீஸாரும் இதே ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் அவர் ஆஜராவதற்கு அவர் கேட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. எனினும் அவர் போலீஸ் முன்பு ஆஜராகவில்லை.

கலாநிதி மாறன் இப்போது ஸ்விட்சர்லாந்தில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: