வியாழன், 7 ஜூலை, 2011

தயாநிதி மாறன் ராஜினாமா- பிரதமரிடம் கடிதம் ஒப்படைப்பு

சென்னை/டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.

ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்கியதில் பெரும் முறைகேடுகளைச் செய்தார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. சிவசங்கரன் தலைவராக இருந்தவரை ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்காமல் வேண்டும் என்றே தாமதப்படுத்தினார். ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்ப்பந்தம் செய்தார். விற்றவுடன் உடனடியாக ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமங்களை வாரி வழங்கினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் தயாநிதி மாறனின் பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸும் சரி, பிரதமரும் சரி தயாநிதி மாறன் தொடர்பாக பெருத்த அமைதி காத்து வந்தனர். இருந்தாலும் இதை ஆறப் போட முடியாத என்பதால் நிலைமை சிக்கலாகியது.

பாதியிலேயே வெளியேறினார்

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். இருப்பினும் கூட்டத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.

கருணாநிதி வீட்டில் அவசர ஆலோசனை

இதற்கிடையே, சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பல தலைவர்களும், தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை திமுக தடுக்கக் கூடாது என்று கருணாநிதியை வலியுறுத்தியதாக தெரிகிறது.

அவர்களது கருத்துக்களை கருணாநிதியும் மறுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து திமுகவின் கருத்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள டி.ஆர்.பாலு இன்று மாலையில் பிரதமரை சந்திக்கவுள்ளார்.

பிரதமரை வீட்டில் சந்தித்தார்

இந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலை 3 மணியளவில் பிரமதரை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பிற்பகல் ஒன்றரை மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்திற்குக் கிளம்பினார் தயாநிதி மாறன். கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் உடன் இருந்தார்.

கால் மணி நேரத்தில் இந்த சந்திப்பு முடிவடைந்து விட்டது. பிரதமர் வீட்டை விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன் வெளியே காத்திருந்த பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரிடம் கொடுத்தார்.

அவர் இன்று மாலை 4. 30 மணிக்கு சென்னைக்குக் கிளம்பும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து வைத்துள்ளார். ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்ட நிலையில் இன்றே அவர் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

"எல்லாம் முடிந்து விட்டது"

முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம், எல்லாம் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ராஜினாமா செய்வது உறுதியானது.

முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தனது வீட்டுக்குத் திரும்பிய தயாநிதி மாறன் அங்கு வைத்து தனது ராஜினாமா கடிதத்தை டைப் செய்ததாகவும், பின்னர் அதை எடுத்துக் கொண்டு பிரதமரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/07/dayanidhi-maran-meets-pm-karunanidhi-okays-his-removal-aid0091.html

கருத்துகள் இல்லை: