திங்கள், 4 ஜூலை, 2011

சன் "டிவி' நிர்வாக அதிகாரி கைது

சென்னை : சினிமா அதிபரிடம் 82 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், சன், "டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை, போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். கந்தன் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். "தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற சினிமாவை எடுத்தார். அவர் இரண்டு நாட்களுக்கு முன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் தயாரித்த, "தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்திற்கான வினியோக உரிமையைத் தருமாறு, சன், "டிவி' நிர்வாகம் மிரட்டியது. மிரட்டல் அதிகரித்ததால், வேறு வழியின்றி செலவுத்தொகை 1.25 கோடி ரூபாயை தருமாறு கேட்டு, படத்தின் வினியோக உரிமையை சன், "டிவி' நிர்வாகத்திடம் கொடுத்தேன். படம் வினியோகம் செய்யப்பட்டு, நல்ல வசூலை எட்டியது. பேசியபடி, 1.25 கோடி ரூபாயை தராமல், குறைந்த தொகையை மட்டுமே தந்தனர். மீதம், 82.53 லட்ச ரூபாய் பணத்தை, பல மாதங்கள் ஆகியும் தரவில்லை. பாக்கி பணத்தைக் கேட்டபோது, "பணம் தர முடியாது. உன்னால் முடிந்ததைச் செய்து கொள்' என, மிரட்டினர்.
மிரட்டல் விடுக்கும் சன்,"டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் புகாரில் கூறியிருந்தார்.கமிஷனர் திரிபாதி உத்தரவின்படி, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அசோக்நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான தனிப்படையினர், ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை நேற்றிரவு சென்னையில் கைது செய்தனர். புகார் குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269232

கருத்துகள் இல்லை: