திங்கள், 18 ஜூலை, 2011

ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர்

சென்னை: சென்னை வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டனுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விவாதிப்பார் என்று அமெரிக்க அரசின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

ராபர்ட் பிளேக், 2006 முதல் 2009 வரை இலங்கையில் அமெரிக்கத் தூதராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை நிலவரம் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் குறித்தும் ஆறரை கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழக மக்கள்தான் பெரும் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு உள்ளது. எனவே ஹில்லாரி கிளிண்டனின் சென்னை விஜயத்தின்போது, அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும்போது நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுப்பப்படும்.

நிச்சயம் இரு தலைவர்களும் இலங்கை விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிப்பார்கள் என்றார் பிளேக்.

ஹில்லாரியின் முதலாவது சென்னை பயணம் குறித்து பிளேக் கூறுகையில், இந்தியாவின் இன்னொரு பகுதிதான் சென்னை. அங்கு வருவதற்கு ஹில்லாரி மகிழ்ச்சியுடன் உள்ளார். டெல்லி, வாஷிங்டன் இடையே மட்டும் அமெரிக்கர்களின் உறவு இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களுடனும் அமெரிக்கர்களுக்குத் தொடர்பு உள்ளது.அந்த வகையில் ஹில்லாரி சென்னை வருகிறார்.

தென் மாநிலங்களுக்கு ஹில்லாரி வந்ததில்லை. அந்த வகையில் சென்னைக்கு வருவதில் அவர் பெரும் ஆர்வத்துடன் உள்ளார். மேலும் ஒரு திறமையான, சக்தி வாய்ந்த பெண் முதல்வரின் ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்திற்கு அவர் வருவது விசேஷமானது.

இது ஒரு அருமையான சந்தர்ப்பம். இரு நாட்டு உறவுகளுக்கும் ஹில்லாரியின் சென்னை பயணம் பெரும் உதவியாக இருக்கும் என்றார் பிளேக்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே கருத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இரு நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துடன்தான் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு தீவிரமாக முயற்சிக்க வேண்டும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துக்களில் இரு நாடுகளுமே ஒரே நிலையில்தான் உள்ளன என்றார் பிளேக்.

இதற்கிடையே, ஹில்லாரியின் சென்னை பயணம், அதிகாரப்பூர்வமற்ற ஒன்று, அதில் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசப்பட மாட்டாது என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிளேக், நிச்சயம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசப்படும் என்று கூறியுள்ளதால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

ஹில்லாரியும், ஜெயலலிதாவும் சந்திக்கும்போது இலங்கைப் பிரச்சினை பேசப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/18/hillary-clinton-jayalalithaa-will-discuss-sri-lanka-us-aid0091.html

கருத்துகள் இல்லை: