வெள்ளி, 22 ஜூலை, 2011

மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா? : எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: இலவச மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் திட்டங்களை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், தடை விதிக்க மறுத்து விட்டது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சுப்ரமணியம் பாலாஜி தாக்கல் செய்த மனு: தேர்தலின் போது, இலவசமாக மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், தங்க தாலி, பேன், ஆடு, மாடு என பல திட்டங்களை அ.தி.மு.க., அறிவித்தது. அதன்படி கவர்னர் உரையிலும் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. லேப்-டாப், மிக்சி, கிரைண்டர், டேபிள் பேன் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டு, அவை திறக்கப்பட்டன. டெண்டர் வழங்குவது நிலுவையில் உள்ளது. தமிழகம் கடன் சுமையில் உள்ளது. அடிக்கடி மத்திய அரசின் உதவியை நாடுகிறது. முதல்வராக பதவியேற்ற பின், டில்லி சென்று பிரதமரை சந்தித்தார். அப்போது மத்திய அரசிடம் இருந்து இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை முதல்வர் கோரினார். இதில், தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மொத்த கடன் தொகை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார். கடந்த அரசு, இலவச "டிவி'க்களை, ஒரு கோடியே 52 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கியது. பொது மக்கள் பணம், இவ்வாறு இலவசங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.
தேர்தலின் போது தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலாகும். இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு கடந்த மார்ச் மாதம் புகார்கள் அனுப்பினேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இலவசங்களை தற்போது வழங்குவது என்பது, தேர்தலுக்குப் பின் லஞ்சம் வழங்குவது போலாகும். அதுவும் பொது மக்களின் பணத்தில் இருந்து வழங்குகின்றனர்.
நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு சட்டவிரோதமாக கையாள்கிறது. இதை, மத்திய தணிக்கைத் துறை அதிகாரியும் அமைதியாக கவனித்துக் கொண்டு இருக்கிறார். இலவசங்களை அவர் அனுமதித்திருக்கக் கூடாது. இலவசங்கள் வழங்குவது, தேசம் மற்றும் சமூக நலன்களுக்கு எதிரானது.
குடும்ப அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரியானதல்ல. வசதிபடைத்தவர்களுக்கும் குடும்ப அட்டை உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள், ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த மாணவர்களுக்கு லேப்-டாப் கிடைக்காமல் போகும். எனவே, இலவச திட்டங்களுக்காக மிக்சி, கிரைண்டர், பேன், தங்கம், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்ய தடை விதிக்க வேண்டும். இந்த திட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோமதிநாயகம், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோமதிநாயகம், "மனு, விசாரணைக்கு உகந்ததல்ல. ஏற்கனவே இதுபோன்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தார். அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதுபோன்ற வழக்கை இங்கு தாக்கல் செய்துள்ளார். இது கோர்ட் அவமதிப்பு. நமது நாட்டில் ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். எனவே, தடை விதிக்கக் கூடாது' என, வாதாடினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், மனு மீதான விசாரணை முடியும் வரை லேப்-டாப் கொள்முதல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றார். தடை விதிக்க மறுத்த "டிவிஷன் பெஞ்ச்', மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=279862

கருத்துகள் இல்லை: