புதன், 20 ஜூலை, 2011

குண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா? - கமிஷனர் பேட்டி

சென்னை: சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவி்ட்டது. இதுகுறித்து விசாரணை அதிகாரி முடிவு செய்வார் என்று கமிஷனர் திரிபாதி தெரிவித்தார்.

இது குறித்து அவர், செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், "சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன.

இப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவில் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பிரிவு போலீஸார் புகாரின் உண்மைத் தன்மையை பொருத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

சக்சேனாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த விசாரணை அதிகாரிதான்", முடிவு செய்வார் என்றார்.

சக்சேனாவுக்கு மீண்டும் போலீஸ் காவல் ?

இதற்கிடையே வல்லகோட்டை படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியதில் ரூ.55 லட்சம் மோசடி செய்து விட்டதாகக் கூறப்பட்டுள்ள புகாரில் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பன், அழகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சக்சேனாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி, போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சக்சேனா 'போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை' என்று கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் காவல் மற்றும் ஜாமீன் மனுக்கள் மீதான 2 தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி, 20-ந்தேதி (இன்று ) மாலை மனுக்கள் மீதான உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.

http://thatstamil.oneindia.in/movies/news/2011/07/20-saxena-may-arrest-under-nsa-act-tripathy-aid0136.html

கருத்துகள் இல்லை: