புதன், 20 ஜூலை, 2011

ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு

சென்னை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று சென்னை வருகிறார். இதையொட்டி நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி சந்திக்கவுள்ளார். அப்போது ஹிலாரியிடம் இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா பேசுவார் என்று தெரிகிறது.

நேற்று டெல்லி வந்த ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஹிலாரி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முன்னுரிமை அளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சனை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். பயங்கரவாதம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.

2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படையாகவும், முழுமையாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முனைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பரஸ்பர புரிந்துணர்வு அவசியம். அந்தவகையில், நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம் என்றார் ஹிலாரி.

இந் நிலையில் இன்று சிறப்பு அமெரிக்க விமானம் மூலம் சென்னை வரும் ஹிலாரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகிறார்.

பிற்பகலில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அங்கிருந்து கோட்டைக்கு செல்லும் ஹிலாரி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து ஹிலாரியிடம் ஜெயலலிதா விளக்குவார் என்று தெரிகிறது.

இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள கலாசேத்ராவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார் ஹிலாரி.

இரவு மீண்டும் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கும் அவர் நாளை அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார். இதையடுத்து டெல்லி திரும்புகிறார்.

ஹிலாரி கிளிண்டன் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஹிலாரி கிளிண்டனோடு அவருடைய பாதுகாப்புக்காக அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களும் 100 பேர் வருகிறார்கள்.

சென்னையில் ஹிலாரி கிளிண்டன் இருக்கும்போது, அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக துணை கமிஷனர் அஸ்வின் கோட்னீஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிலாரி கிளிண்டன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரது குண்டு துளைக்காத காருக்கு பின்னால் 15 கார்களில் போலீசார் பாதுகாப்பு அரணாக செல்வர்.

அவர் தங்கப்போகும் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகளோடு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/20/hillary-jayalalithaa-discuss-sri-lanka-issue-today-aid0090.html

கருத்துகள் இல்லை: