சனி, 23 ஜூலை, 2011

கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சிறிலங்காவுக்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது தனிப்பட்ட அழைப்பை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கையளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றுக்காலை ‘இந்து‘ நாளிதழின் ஆசிரியர் என்.ராம், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேசியது குறித்து இந்து ஆசிரியரிடம் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தமிழ்நாடு முதல்வர் சிறிலங்கா வரத் தயாராக இல்லாவிட்டாலோ அல்லது வேலைப்பளு அதிகமாக இருந்தாலோ நாடாளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்கலாம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.மத்திய அரசுடன் அவர் இதுபற்றி பேசி முடிவெடுக்க முடியும் என்றும், நாடாளுமன்றக் குழுவை வரவேற்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த நாடாளுமன்றக் குழுவில் தனியே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் இடம்பெறக் கூடாது என்றும் அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச நிபந்தனை விதித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கலை நியாயப்படுத்தும் வகையில் சிறிலங்கா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தெற்கில் அம்பாந்தோட்டை, கொழும்பு என்று மாவட்டங்கள் தோறும் படைமுகாம்கள் உள்ளதாகவும், அதுபோலவே வடக்கு, கிழக்கிலும் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
http://www.puthinappalakai.com/view.php?20110723104339

கருத்துகள் இல்லை: