சனி, 30 ஜூலை, 2011

பொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் காணும் ஜெ - கருணாநிதி

சென்னை: கற்பனையான காரணங்களைக் கூறி பொய் வழக்கு போட்டு திமுக தலைவர்களை துன்புறுத்தி இன்பம் காணுகிறார் ஜெயலலிதா என திமுக தலைவர் மு கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த பழி வாங்கும் நடவடிக்கை என்பது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம் போன்றது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா எப்போது ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக தனக்கு பிடிக்காதவர்கள் மீது காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்கு புனைந்து நடவடிக்கை எடுக்கத் தவறமாட்டார்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் தவறு என்று கூறினார்களே! என்ன ஆயிற்று அந்த வழக்கு? நிரூபித்தார்களா? நிரூபிக்க முடிந்ததா? பொய் வழக்கு தானே அது? என் மீது குற்றப்பத்திரிகையையாவது தாக்கல் செய்ய முடிந்ததா? எந்த சான்றுகளை வைத்து என்னைக் கைது செய்தார்கள்? அவ்வாறு பொய் வழக்கு போட்டதற்காக அவர்கள் மீது என்ன வழக்கு போடுவது? என்னைக் கைது செய்து அந்த அளவிற்கு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அவர்களை என்ன செய்வது?

டான்சி ஊழல் 

இதே மேம்பாலங்களைக் காட்டி சென்னை மாநகர மேயராக இருந்து சிறப்பாக பல காரியங்களைச் செய்த மு.க.ஸ்டாலின் மீதும் அதே போன்று பொய் வழக்கு சுமத்தி ஜெயலலிதா ஆட்சியிலே கைது செய்யவில்லையா? நான் கைது செய்யப்பட்ட அன்றே மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள்.

மதுரை மாநகரில் மறியலில் ஈடுபட்ட பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், என் மகன் மு.க.அழகிரி போன்றவர்களும் அங்கே கைது செய்யப்பட்டு மதுரை சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் சட்டப்படியான நடவடிக்கைகள் தானா? பழிவாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் அல்லவா?

1995-ம் ஆண்டு டான்சி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய கவர்னர் சென்னா ரெட்டி அனுமதியளித்தார் என்பதற்காக; கவர்னருக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதா வழக்கு தொடுத்ததோடு, கவர்னர் சென்னா ரெட்டியை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கோரி பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றினாரே. இது கடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவில்லையா?

வைகோ கைது

தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரவோடு இரவாக வீட்டிற்கு அனுப்பினார். பொடா சட்டத்தின் பெயரால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு மாதக்கணக்கிலே சிறையிலே அடைக்கப்பட்டார்.

தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளபோதும், நில அபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி அதிலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற நில அபகரிப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிலே கூட இந்த ஐந்தாண்டுகளில் அவருடைய கட்சிக்காரர்கள் செய்த தவறுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல்; எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கி குற்றம் சுமத்திடும் செயலைத் தொடங்கியிருக்கிறார்.

தி.மு.க.வை பழிவாங்க...

எந்த அளவிற்கு தவறான தகவலின் பேரிலும் உண்மை தெரியாத நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என்பதற்கும், கொடைக்கானல் நகரமன்றத் தலைவரை கைது செய்கின்ற அளவிற்கு எந்த அளவிற்கு பழிவாங்கும் தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு உதாரணம் ஆகும்.

இந்த வகையிலே தான் இந்த ஆட்சியிலே தி.மு.க.வினர் மீது குறிப்பாக அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை தளபதி மற்றும் கழக முன்னணியினர் மீது பொய் வழக்குகளை போட்டு விசாரணை என்ற பெயரால் இழுத்தடிக்கிறார்கள். அதிலும் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு - மருத்துவமனையிலே நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டு, தற்போது தான் சற்றுத் தேறி வருகிறார்.

அவரையெல்லாம் மூன்று நாட்கள் விசாரணை என்ற பெயரால் வைத்து அதிலே இந்த ஆட்சியினர் இன்பம் காண முயலுகிறார்கள்.

ஜெயலலிதா, கழகத்தைப் பழிவாங்கத் தவறான ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். அது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதமாகும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.பின் குறிப்பு
தங்களது ஆட்சியில் பீடி இலை கடத்தினவனையும் சாரி கடத்தினவனையும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கடத்தியதாக பிடித்து பொய் வழக்குப் போட்டு இம்சித்ததையும் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல விடுதலைப்புலிகள் தான் அவர்களை கொல்கிறார்கள் என்று காவல்துறை அதிகாரிகளை கொண்டு சொல்ல வைத்ததையும் தமிழத்திலுள்ள ஈழத்து அகதிமுகாங்களில் உள்ள அப்பாவிகளை விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்று காவல்துறையினரை வைத்து இம்சைப்படத்தியதையும் கூட நினைவு படுத்தியிருக்கலாம் கலைஞரே

கருத்துகள் இல்லை: