திங்கள், 4 ஜூலை, 2011

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் நிர்மாணிக்கவிருந்த புதிய நகரத் திட்டம் இடைநிறுத்தம்

கொழும்பு காலிமுகத்திடலை [Galle Face] கடற்கரையை அண்மித்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்படத் தீர்மானிக்கப்பட்ட 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புதிய நகர அமைப்புத் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

'உயர்மட்ட' அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற கட்டளையை அடுத்தே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மீள ஆராயப்படவுள்ளதாகவும் உயர் மட்டத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

"நாடாளுமன்றால் நியமிக்கப்படும் மதிப்பாய்வு ஆணைக்குழு நாடாளுமன்றமானது இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கும்" என அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டதற்கான வேறு காரணங்கள் எதுவும் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை. முதன் முதலில் புதிய நகர அமைப்புத் திட்டம் தொடர்பான தீர்மானத்தை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் இடம்பெற்ற UPFA யின் மே தினக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.

ஆனால் அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மாத்தாளை விமான நிலையம் போன்ற திட்டங்களை செயற்படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, காலிமுகத்திடல் கடற்கரையை அண்மித்து அமைக்கத் தீர்மானிக்கப்பட்ட புதிய நகரத் திட்டமானது, சிறிலங்கா நாடாளுமன்றின் சம்மதம் பெறப்பட்ட பின்னரே அமுல்ப்படுத்தப்படும் என மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.

மேதினம் அன்று அதிபர் மகிந்த ராஜபக்ச காலிமுகத்திடல் கடற்கரையை அண்மித்த பகுதியில் புதிய நகரம் அமைக்கப் போவதாக அறிவித்த பின்னர், கொழும்பு வாழ் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், இதற்கெதிரான தமது ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டனர்.

அத்துடன் பிரபலம்மிக்க காலிமுகத்திடல் கடற்கரையின் முக்கியத்துவம் இத்திட்டத்தின் மூலம் இழக்கப்பட்டுவிடும் என்பதை நினைத்து சூழலியலாளர்கள் மிகவும் அச்சமுற்றிருந்தனர்.

கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து பழைய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டிருந்த [தற்போது சிறிலங்கா அதிபர் செயலகம்] இடம் வரையிலான நிலப்பரப்பிலேயே சீன நிதியுதவியுடனான இப் புதிய நகரை அமைப்பதென திட்டமிடப்பட்டது.

அதாவது பல மில்லியன் கணக்கான மக்கள் தமது மன அமைதிக்காகவும் கடற்காற்றை சுவாசிப்பதற்காகவும் பின்னேரப் பொழுதுகளைக் கழிக்கின்ற கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதி இத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை.

700 மில்லியன் அமெரிக்க டொலரில் அமைக்கப்படவுள்ள புதிய நகர்த்திட்டம் தொடர்பாக கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற கப்பல் போக்குவரத்துத் தொடர்பான கலந்துரையாடலில் சிறிலங்கா துறைமுக அதிகாரசபைத் தலைவர் பிறியத் விக்கிரம தெரிவித்திருந்தார்.

ஆனால் இதற்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள நாட்டையோ அல்லது குறிப்பிட்ட முதலீட்டாளர் தொடர்பான எந்தவொரு தகவலையும் இவர் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான மறுமதிப்பீட்டை நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவானது மேற்கொண்ட பின்னரே இது தொடர்பான சரியான தீர்வு எட்டப்படும் என உயர்மட்டத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வழிமூலம்: The Sunday Times
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: