வெள்ளி, 8 ஜூலை, 2011

புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்' - இந்திய ஆய்வாளர்

தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதிகாரப் பகிர்வு பொறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு ராஜபக்ச தயாராக இருந்தால், அவர் புத்திசாலியாகவும் சிறிலங்கா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாகவும் அமையும்.

இவ்வாறு இந்திய ஊடகமான expressbuzz இணையத்தளத்தில் Anuradha M Chenoy எழுதியு ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai;com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ற கோரிக்கைப் பட்டியல் அடங்கிய அறிக்கையொன்றை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களளுக்கான பொறுப்புச்சொல்லும் நடைமுறையினைச் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இந்தப் போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு நாட்டின் வடபகுதியில் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

இடைவிடாது தொடர்ந்த எறிகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் வட பகுதி வெறும் கற்குவியல்களாகியது. அடிப்படை மனிதாபிமான உதவிகள் கூட இந்த மக்களுக்கு மறுக்கப்பட்டது.

குறித்த இந்தக் கோரிக்கைகளைச் சிறிலங்கா அரசாங்கம் செவிமடுக்கத் தவறுமிடத்து சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத்தடை கொண்டுவரப்படவேண்டும் எனவும் ஜெயலலிதா இந்திய மத்திய அரசாங்கத்தினை வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை நடைமுறைப்படுத்தவேண்டுமெனில் சிறிலங்கா தொடர்பான தனது வெளியுறவுக்கொள்கையினை இந்தியா மாற்றியாகவேண்டும்.

இதுவிடயம் தொடர்பில் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடு மகிந்த அரசாங்கத்தினை நிச்சயம் உலுக்கியிருக்கும்.

எவ்வாறிருந்தும், பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை ஐ.நா. சபையால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்கூட, மகிந்த தனது இராணுவம் போரின் இறுதி நாட்களில் மேற்கொண்ட கொடூர நடவடிக்கைகளை மறுத்துவருகிறார்.

ஐ.நா. வெளியிட்ட அறிக்கைகளையும் தீர்மானத்தையும் அவர் எதிர்த்து வருகிறார். தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகள் திருப்திகரமாக அமையாதது மட்டுமன்றி அவர்களின் வீடுகளும் வாழ்வாதாரங்களும்கூட அவர்களிடம் மீளளிக்கப்படவில்லை.

போருக்குப் பின்னரான ஒழுங்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பிலான பேச்சுக்களுக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்து ராஜபக்ச அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள தேசத்தை தனக்கு ஆதரவாக்கியுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து இராணுவ கட்டுப்பாட்டையும் அதிகரித்த ராஜபக்ச: "இந்த நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இல்லை. போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா மக்களில் இரண்டு பிரிவினரே உள்ளனர். அதாவது தேசப்பற்றாளர்களும் துரோகிகளுமே அவர்கள்", என மே 2009ல் அறிவித்தார்.

சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சுதந்திரக் குரல்கள் மீதான அடக்குமுறையினால் மட்டும் சிறிலங்காவில் அமைதியைக் கொண்டுவர முடியாது. இது புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுடன் சனநாயகத்தையும் பல்லினத்துவத்தையும் பாதிக்கிறது. இதனால் நீண்டகால பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஜெயலலிதாவின் வார்த்தைகள் இந்தியாவின் வெளியுறவுக் கட்டமைப்புத் தொடர்பாக திருப்தியுற்றிருக்கும் ஜாம்பவான்களுக்கெல்லாம் குழப்பத்தைத் தரும்.

இந்தியா மற்றும் சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு International Crisis Group வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல, சிறிலங்காவில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நாடு இந்தியாவாகும். ஆனால் நிலையான அமைதியை நோக்கிச் செல்வதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஊக்கமளிப்பதில் அதன் கொள்கைகள் பலனளிக்கவில்லை.

ஏனெனில், இந்தியா கணிசமானளவு உதவியை வழங்கியபோதும், வடக்கு இராணுவமயப்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும் என போதியளவு அழுத்தம் கொடுக்கவில்லை.

சிறுபான்மை மக்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும், முழுமையாக புனர்வாழ்வளிக்கப்படவேண்டும், மறுக்கப்பட்ட சனநாயக, சுதந்திர உரிமைகள் மறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அவை மீண்டும் வழங்கப்படவேண்டும் என இந்தியா உரத்துக் கூறவில்லை.

மாறாக, இந்தியா பிராந்திய பூகோள அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டியதுடன் சிறிலங்கா ஆட்சியாளரிடமிருந்து அந்நியப்படுவதற்கு விரும்பவில்லை.

ராஜபக்ச அரசாங்கம் மீது அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு இந்தியா-சிறிலங்கா உறவில் கணிசமான விரிசலை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இரண்டாவது, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமையைப் பெறும் புதுடில்லியின் ஆசைக்குக் கொழும்பின் ஆதரவு அவசியமானது.

மூன்றாவது, இந்தியாவின் தடையற்ற வணிகத்திற்கு சிறிலங்கா திறந்திருக்கவேண்டும் என அது விரும்புகிறது.

நான்காவது, கடந்த காலங்களில் சிறிலங்காவில் இந்தியாவின் தலையீடு தந்த கசப்பான பாடங்களினால் மீண்டும் தேசிய ரீதியில் எதிர்ப்புத் தோன்றுமோ என அஞ்சுகிறது.

சிறிலங்கா போன்ற அயல்நாட்டுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவின் நலன்கள் தொடர்பான இத்தகைய தேவையற்ற அச்சத்தினை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டுமா?

தற்போதைய ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்கு எல்லாவற்றையும் இந்தியா செய்தாலும் ஏன் சிறிலங்கா சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தாமல் விடவேண்டும்?

பூகோள அரசியல் நலன்களுக்காக சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற இந்தியா கடைப்பிடிக்கும் கருதுகோள்களையும் விழுமியங்களையும் கைவிடவேண்டுமா?

இராணுவமயப்படுத்தப்பட்ட, சர்வாதிகார ஆட்சி முறைமைகொண்ட சிறிலங்காவா அல்லது உறுதிப்பாடுடைய சனநாயக முறைமைகொண்ட சிறிலங்காவா இந்தியாவுக்கு நல்லது?

மேலும், இந்தியாவின் தமிழ் மக்களே கவலையுடனும் சிறிலங்காவில் தமிழ் மக்களின் நிலமை தொடர்பாக பொறுமையிழந்தும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக, இந்தியாவின் கணிப்பீடுகளில் இவை யதார்த்தமாக இடம்பெறவேண்டும்.

ஜெயலலிதாவின் வெற்றி மற்றும் அறிக்கைகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சிறுபான்மை சமூகம் தொடர்பான இந்தியாவின் கொள்கை செயற்படுநிலைக்கு மாறியுள்ளமை ஒரு சாதகமான விடயமே.

வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலொசகர் சிவ் சங்கர் மேனன் ஆகியோர் அவசர அவசரமாக யூனில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பொருத்தமான தருணத்தில் பயணத்தை மேற்கொண்டதுடன் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு, உண்மையான நல்லிணக்க முயற்சி, வேகமான நேர்மையான முறையில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துதல், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை மற்றும் இயல்புநிலையைத் தோற்றுவித்தல் ஆகியனபற்றி விவாதித்துள்ளனர்.

ஆனால் இந்திய வெளியுறவுச் செயலரின் அழுத்தங்களுக்குப் பின்னரும் கொழும்பு மனம்மாறுவதுபோல தெரியவில்லை. ஒரு பயணம் மற்றும் சில அறிக்கைகளைவிட மேலும் சில விடயங்களை இந்தியா செய்யவேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் சனவரி 2011ல் ஆரம்பித்த பேச்சுக்களுக்கான அதன் ஆதரவு திட்டமிட்ட நேர அட்டவணைக்குள் நடாத்தப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியுள்ளது.

இந்தப் பேச்சுக்களில் முக்கிய விடயமாக அதிகாரப்பகிர்வு மற்றும் இராணுவமயப்படுத்துதலை இல்லாது செய்தல் ஆகியன அமையவேண்டும்.

இந்தியா தனது உதவிகளையும் புனர்வாழ்வுத் திட்டங்களையும் கண்காணிப்பதுடன் வெளிப்படையான கண்காணிப்புப் பொறிமுறையொன்று இந்தத் திட்டங்களுக்கு ஏற்படுத்தப்படவேண்டும்.

உதவி எங்கு தேவையோ அங்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தனது உதவிகள் வடக்குக் கிழக்கு உள்ளூர் அரசாங்கத்தினூடாக தனது உதவிகள் வழங்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தவேண்டும்.

இந்தியாவின் மாநிலங்கள் அதாவது தமிழ்நாட்டுடன் தான் தொடர்புகளை வைத்திருக்கமாட்டேன். மாறாக இந்தியாவுடன் மட்டுமே தனது உறவுகள் என்பதே ராஜபக்ச அரசாங்கத்தின் பதிலாக இருந்தது.

ஆனால் சிறிலங்காவைப் போலன்றி மாநிலங்களால் ஆனதே இந்தியா என்பதை ராஜபக்ச விளங்கிக்கொள்ளவேண்டும்.

எவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதும் இந்தியாவின் சமஸ்டி முறைமை அதேபோல இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் பல்லினத்துவம் ஆகியனவே இந்திய சனநாயகத்தின் முதுகெலும்பாகும்.

எனவே, தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதிகாரப் பகிர்வு பொறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு ராஜபக்ச தயாராக இருந்தால், அவர் புத்திசாலியாகவும் சிறிலங்கா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாகவும் அமையும்.

அத்துடன் மிகப் பெரிய வெற்றிக்குப் பின்னர் இதனை முன்னெடுப்பதைவிட இதனை முன்னெடுப்பதற்குச் சிறந்த நேரம் வேறெதுவாக இருக்க முடியும்?

சிறிலங்காவின் கவலைகளை அது நீக்குவதுடன் நாட்டினது அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த மக்களுடனான இடைத்தொடர்பைப் புதுப்பித்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பையும் வழங்கவேண்டும்.

"போரில், தீர்வு: தோல்வியில் எதிர்ப்பு: வெற்றியில் எதிரிமீது கருணை",என வின்சன்சேர்ச்சில் ஒரு தடவை கூறியிருந்தார். வரலாற்றில் நன்றாக உணரப்பட்டிருப்பதால், அவ்வாறான அறிவுரைகளைப் பின்பற்றுவது பயனுடையதாகும்.

சிறுபான்மையினரது உரிமைகளை வழங்குவதால் தான் சார்ந்த பெரும்பான்மைச் சமூகம் அச்சம்கொள்ளும் எந்தத் தேவையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அதிபர் ராஜபக்ச செயலாற்றுவரானால் அது அவர் சிறிலங்காவின் தேசியவாதப் போக்குக்காக மேலும் செயலாற்றுவதாகவே இருக்கும்.

நாட்டினது கொள்கைகள் மற்றும் அரச நிறுவனங்களையும் உள்வாங்கப்படுவதோடு அவை இந்த உண்மையினை விளங்கிக்கொண்டு செயலாற்றுமிடத்து வேகமான முன்னேற்றத்தினைக் காணமுடியும்.

தேரிய ரீதியிலான முட்டி மோதும் முனைப்புக்களிலும் சிறிலங்காவினது எதிர்க்கட்சியினர் ஈடுபடலாகாது. இதுபோன்ற சண்டைகள் சிறிலங்காவிற்கு ஏலவே பல துயரங்களைப் பெற்றுத்தந்துவிட்டது.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவினது கொள்கையாக, தென்னாசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல அனைத்துலக ரீதியில் இந்தியாவின் சட்டபூர்வ தன்மையினை மீள்நினைவுபடுத்தியமைக்காக புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்.

அதாவது, இந்தியாவினது சட்டபூர்வதன்மை பூகோள அரசியல் தந்திரோபாயங்களின்பால் அமைந்ததாக மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரும் சக்திகள் வெளிப்படுத்தும் மதிப்புகள் மற்றும் விதிமுறைகளின்பால் அமையவேண்டும்.

*Anuradha M Chenoy is director, Centre for Russian and Central Asian Studies, Jawaharlal Nehru University

கருத்துகள் இல்லை: