சனி, 9 ஜூலை, 2011

சன் டிவி அலுவலகத்திற்கு அழைத்து சிவசங்கரனை மிரட்டினார் கலாநிதி- ஆதாரம் திரட்டும் சிபிஐ

சென்னை: ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை சன் டிவி அலுவலகத்திற்கு வரவழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாகவும், அங்கிருந்து சிவசங்கரன் சென்ற பின்னர் தொலைபேசி மூலம் தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பான முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆதாரம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் உடனடியாக வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இருவரும் கைது செய்யப்படுவதற்கான சூழல்களும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை இந்தியாவின் பிரபலமான சகோதரர்களில் ஒருவரான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் கூட்டாக பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் மூலம் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் தலைவராக சிவசங்கரன் இருந்தபோது அவர் கோரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்காமல் தாமதம் செய்து வந்தார் தயாநிதி மாறன். மேலும், மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்று விட்டுப் போய் விடுமாறும் தயாநிதி மாறன் மிரட்டினார் என்பது சிவசங்கரனின் முக்கியக் குற்றச்சாட்டு.

இதற்காக தன்னை சன் டிவி அலுவலகத்திற்கு வரவழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாக சிபிஐயிடம் தெரிவித்துள்ளார் சிவசங்கரன். மேலும், தான் அங்கிருந்து கிளம்பியவுடன் தயாநிதி மாறன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்று விடுமாறு கூறி அவரும் மிரட்டினார் என்று சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்ததாக சிவசங்கரன் கூறியுள்ளார். அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் தயாநிதி மாறன்.

இந்த புகாரை முக்கியமாக பதிவு செய்துள்ள சிபிஐ, இதுதொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக முக்கிய ஆதாரம் சிபிஐ வசம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஆதாரத்தைப் பரிசீலித்து வரும் சிபிஐ, அதில் உண்மை இருப்பது உறுதியானால், கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்யவும் சிபிஐ தயாராகி வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் மலேசியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் அதிகாரிகள் சிலருக்கும், ஏர்செல் விற்பனை விவகாரத்தில் தொடர்பு இருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சிபிஐ தனது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் விரைவில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த சிபிஐ தயாராகி வருகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/09/cbi-probes-kalanithi-maran-threat-to-sivasankaran-aid0091.html

கருத்துகள் இல்லை: