வெள்ளி, 8 ஜூலை, 2011

ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது.

இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் கூட இலங்கை என்றாலே வெறுத்துப் போய் விடுவார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால். அப்படி ஒரு வலி மிகுந்த உதிரம் சிந்திய போராட்டத்தின் முடிவைத்தான் லண்டன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம், காட்சிகளாக தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு முறையாவது இந்த கோரக் காட்சிகளைப் பார்த்து கண்ணீர் வடித்திருப்பார்கள். தமிழர்கள் அல்லாத எத்தனையோ லட்சம் வெளிநாட்டவரும் கூட இதைப் பார்த்து கலங்கியிருப்பார்கள். ஆனால் நொய்டாவில் கழுதை செத்துக் கிடந்தால் விடிய விடிய, தொண்டை வலிக்க நியூஸ் வாசித்து கூக்குரல் போடும் ஆங்கில மீடியாக்கள் மட்டும் இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனிதாபிமானத்தை உலகுக்குப் போதித்த நாட்டில் தான் இந்த நிலை.

இந்த நிலையில் அத்திப் பூ போல ஹெட்லைன்ஸ் டுடே டிவி இந்த டாக்குமென்டரியை சானல் 4 நிறுவனத்திடமிரு்ந்து வாங்கி நேற்று ஒளிபரப்பியது. அதேசமயம், இந்த டாக்குமென்டரிப் படம் குறித்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து செய்திகளையும் ஒளிபரப்பி வந்தது.

இலங்கையில் நடந்தேறிய அந்த அகோரமான இனப்படுகொலை குறித்த இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பார்த்த யாருமே நிச்சயம் சாப்பிடிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அவலம்அந்தக் காட்சிகளில். பெண்களை கொடூரமாக கற்பழித்த கதைகள், தமிழர்களை ஈ எறும்பு போல கருதி இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொடுமை, இளைஞர்களையும், சிறுவர்களையும் கூட கொடூரமாக கொன்று குவித்த அவலம், மருத்துவமனைகளை குறி வைத்து குண்டு வீசி நடத்திய அட்டூழியம், தமிழர்களை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி, கண்களைக் கட்டி தலையில் சுட்டுக் கொன்ற அகோரம், இருக்கிற பீஸிலேயே இந்த பீஸ்தான் நல்லாருக்கு என்று நிர்வாணப்படுத்தி கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணைப் பார்த்து சிங்கள காடையர்கள் பேசிய அசிங்கமான வசனங்கள் என கண்ணீருக்குப் பதில் ரத்தத்தை வரவழைக்கும் காட்சிகள் நிறைந்த டாக்குமென்டரி.

இன்றும் நாளையும் கூட இந்த டாக்குமென்டரியை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே. இன்று இரவு 11 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கும் இந்த டாக்குமென்டரியைக் காணலாம்.

இலங்கை இனப் பிரச்சினை குறித்து தமிழகத்தைத் தாண்டி இந்திய மக்கள் யாருக்குமே சரியாக புரியாத நிலையே இன்று வரை உள்ளது. போர் நடந்தபோதும் சரி, முடிந்தபோதும் சரி, அங்கு நடந்த இனப்படுகொலைகளும் சரி இந்தியாவின் பெரும்பாலான பகுதி மக்களுக்கு இதுவரை புரியவே இல்லை அல்லது சரியாக போய்ச் சேரவில்லை.

ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய டாக்குமென்டரியை இந்தியாவின் அத்தனை பகுதி மக்களும் பார்த்திருப்பார்கள். கண் முன் கண்ட காட்சிகளைப் பார்த்த பிறகாவது இலங்கையில் நடந்த ஈனத்தனத்தின் அகோரத்தை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம். அல்லது குறைநத்து ஈழத் தமிழர்கள் மீது அனுதாபத்தையாவது அவர்கள் வெளிப்படுத்த இது உதவியிருக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Thanks : http://thatstamil.oneindia.in/news/2011/07/08/headlines-today-airs-sri-lanka-killing-fields-aid0091.html

கருத்துகள் இல்லை: