செவ்வாய், 5 ஜூலை, 2011

மிகவும் சிக்கலானது – காங்கிரஸின் இராஜதந்திர வார்த்தை

ஆந்திரத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில், அப்பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சியின் ‘மேலிட’ பார்வையாளரும், பொதுச் செயலருமான குலாம் நபி ஆசாத் கூறிய கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மூத்த தலைவர்களையே கோவத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக ஹைதராபாத் வந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தெலுங்கானா பிரச்சனை குறித்து பேசாமல், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்துப் பேசுவதற்கு முன்னுரிமை அளித்துவிட்டு, பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தெலுங்கானா பிரச்சனை சிக்கலானது” என்றும், அது தொடர்பாக “அவசரமாக முடிவெடு்க்க முடியாது. ஏனென்றால் அதனால் தேசத்திற்கு பாதிப்பு ஏற்படும்” என்றும் கூறியதோடு மட்டுமின்றி, “தெலுங்கானா பிரிவினை பற்றி மக்கள் பிரதிநிதிகள் யாரும் பேசி பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இதுதான் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு தெலுங்கானா பிரச்சனையின் ஆழம், அகலம் தெரியாதது போலவும், தனக்கு மட்டுமே அதெல்லாம் தெரியும் என்பது போலவும் குலாம் நபி ஆசாத் பேசியதற்கு, காட்டமாக பதிலளித்த ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கேசவ ராவ், “என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆசாத் பேசியுள்ளார்” என்றும், “ஆசாத் பேசியது அர்த்தமற்றது” என்றும் சாடியுள்ளார்.

“தெலுங்கானா தனி மாநிலமாக வேண்டும் என்பதற்காக இதுவரை 600க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரைத் தந்துள்ளனர், எனவே இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது” என்றும் கேசவ ராவ் கூறியுள்ளார்.

“தெலுங்கானா - அடுத்த கட்டம்” என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடந்த கருத்தரங்கில் கேசவ ராவ் இவ்வாறு பேசியதற்கு மற்றொரு காரணம், “தெலுங்கானா பிரச்சனை சிக்கல் நிறைந்தது” என்று ஆசாத் கூறியதும், அதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே காங்கிரஸ் கட்சியின் ஆந்திரத் தலைவர்கள் பேசு வருவதுபோல் பேட்டியளித்ததும்தான். அது என்ன சிக்கல் நிறைந்தது? ஆந்திரத் தலைவர்களுக்கெல்லாம் புரியாத சிக்கல் ஆசாத்திற்கு மட்டும் தெரிந்துள்ளதா? என்று வினவுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் நடைமுறை தந்திரங்களை அறிந்தவர்களுக்கு இது புரியாததல்ல. உடனடியாகத் தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்சனையை கிடப்பில் போடுவதற்கு காங்கிரஸ் தலைமை மட்டுமல்ல, காங்கிரஸ் அரசுகளும் இந்த வார்த்தையை பயன்படுத்தும். அதுதான் “பிரச்சனை சிக்கலானது” என்பது. அவர்கள் ராசி, இப்படி காங்கிரஸ் தலைவர்கள் சொல்லும்போதெல்லாம், அவர்களை காத்திருந்து பேட்டி காணும் பத்திரிக்கையாளர்களும் ‘சிக்கலானது’ என்றால் என்ன பொருள், விளக்கிக் கூறுங்களேன் என்று ஒரு தடவையும் கேட்டதில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் இராஜதந்திர வார்த்தைகளில் இந்த ‘சிக்கலானது’ என்பதும் ஒன்றாகிவிட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கலானது


PTI
கடந்த வாரம் புதன் கிழமை தனது இல்லத்தில் மொழி நாளிதழ்கள் ‘சில’வற்றின் ஆசிரியர்களை தனது இல்லத்தில் பிரதமர் சந்தித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இலங்கைத் தமிழர் பிரச்சனை மிகவும் சிக்கல் நிறைந்தது. அதற்கு உடனடியாகத் தீர்வு காண்பது எளிதல்ல. இதனை தமிழக முதல்வர் புரிந்துகொண்டுள்ளார், முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்” என்று பேசினார். அப்போதும் அங்கிருந்த அனுபவமிக்க பத்திரிக்கை ஆசிரியர்கள் எவரும் இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கல் நிறைந்தது என்று கூறிகிறீர்களே, எப்படி என்பதை சற்று விளக்குங்கள் என்று கேட்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு லிமிட்டுக்கு உட்பட்டு வினாக்களை கேட்டு பிரதமர் அளிக்கும் பதிலை பெரிதாக்கி போட வேண்டும் என்று அசைன்மண்ட் கொடுக்கப்பட்டவர்கள். அப்படி ஏற்கும் பத்திரிக்கைகளைத்தானே பிரதமர் அலுவலகம் மதிக்கும், அழைக்கும்? எனவே அவர்கள் விளக்கம் கேட்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கல் நிறைந்தது, அதற்கு உடனடியாகத் தீர்வு கண்டு விட முடியாது. ஆனால், இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்ச போர் தொடுத்தால் அதற்கு முழுமையாக, எல்லாவிததிலும் ஆதரவு தருவதற்கு மட்டும் எவ்வாறு உடனடியாக முடிவு எடுக்க முடிந்தது?

இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழ் மக்களை இன்று பாதுகாப்பற்ற அனாதைகளாக்கியுள்ளது, அவர்களின் வாழ்கை முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டுள்ளது, வாழ வழியின்றி திணறும் அம்மக்களை இன்றளவும் சிங்கள இனவெறி இராணுவம் வதைக்கிறது. இதுவெல்லாம் இந்தியப் பிரதமருக்கு சிக்கலாகத் தெரியவில்லை, உடனடியாகத் தீர்வுகாண வேண்டிய பிரச்சனையாகவும் தெரியவில்லை!

இனப் படுகொலையாளன் ராஜபக்சவுக்கு முழு ஆதரவு தந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொல்ல துணை புரிந்துவிட்டு, இன்றளவும் அந்நாட்டுடன் ‘ஆழமான’ உறவு கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தெலுங்கானாவிற்காக 600க்கும் அதிகமானோர் உயிரைத் தந்தது பெரிய விடயமா என்ன? சாவது ஆளும் குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால் அதற்காக எத்தனை ஆயிரம் மக்களை வேண்டுமானாலும் கொன்றொழிக்கும் ஒரு கட்சியின் தலைமையிடமிருந்து நியாயமான தீர்வுகளை எதிர்பார்ப்பது நிச்சயமாக ‘சிக்கலானதுதான்’.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1107/04/1110704034_1.htm

கருத்துகள் இல்லை: