சனி, 9 ஜூலை, 2011

கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை ” பிரணாப்: கருணாநிதியை சந்தித்த பின் பேட்டி

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரணாப் தி.மு.க., - காங்., கூட்டணி பலமாக உள்ளது என்றார். பிரணாப்புடன் மத்திய அமைச்சர்கள், நாராயணசாமி, காங்., தலைவர் தங்கபாலு, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன் , பொன்முடி, ஆகியோர் உடன் இருந்தனர்.

மத்திய அமைச்சரவையில் தி.மு.க.,வில் அடுத்து யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது அல்லது என்பது குறித்த கருத்தை கருணாநிதியிடம் கேட்க பிரணாப் வந்துள்ளார். ஆனால் தி.மு.க,. தரப்பில் யாரையும் அடுத்து அமைசசர் பொறுப்பிற்கு அடையாளம் காட்டத்தயாராக இல்லை என தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா, கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து தயாநிதி மாறனும் சிக்கியுள்ளார். இதனால், அவர், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டிற்காக இரண்டு அமைச்சர்கள் அதுவும் தி.மு.க., என்ற ஒரே கட்சியில் குறுகிய கால இடைவெளிக்குள் ராஜினாமா செய்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில், தி.மு.க.,வுக்கு அமைச்சர் பதவி அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. முக்கிய கூட்டணிக் கட்சியாக இருக்கும் தி.மு.க.,வின் இரண்டு கேபினட் அமைச்சர்களும் பதவியை விட்டு போய்விட்டதால், அந்த காலியிடங்களை எப்படி நிரப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., சார்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை. புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் அமைச்சர் பதவி தேவை தானா என்று ஒருதரப்பு கருதுகிறது.

ஆனால், இதுவரை கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றையுமே குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தலைமை தாரை வார்த்தது. இப்போது, குடும்ப ஆதிக்கம் சற்று தளர்ந்துள்ள நிலையில், அமைச்சர் பதவி வாய்ப்பு வருகிறது என்றால் அதை கட்சிக்காரர்களுக்கு அளிப்பதில் என்ன தவறு என்று இன்னொரு தரப்பு கருதுகிறது.இந்த சூழ்நிலையில் இது பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னை வருகிறார். இவர் இன்று காலை, கோபாலபுரத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் புதிய அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்கிறதா, இல்லையா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அந்த புதிய அமைச்சர்கள் யார், யார் என்பது பற்றிய விவரங்களும் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணி பலமாக உள்ளது: பிரணாப் பேட்டி : கருணாநிதியை சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் மேலும் கூறுகையில்; தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் நான் தற்போது சென்னை வந்துள்ளேன். பல மாற்றங்கள் நடந்துள்ளது. இன்றைய அரசியல் நிலவரம் குறித்து கருணாநிதியுடன் பேசினேன். இந்த கூட்டணியில் குழப்பம் இல்லை. தி.மு.க., - காங்., கூட்டணி பலமாக உள்ளது தொடர்ந்து இருக்கும் என்றார்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271890

கருத்துகள் இல்லை: