திங்கள், 11 ஜூலை, 2011

தமிழ் ஈழ சுதந்திரத்தின் நுழைவாயிலாகட்டும் தெற்கு சூடான்! - வைகோ

சென்னை: தெற்கு சூடான் நாட்டின் உதயம் சர்வதேச அரங்கில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான நுழைவாயில் ஆகட்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:

இனப் படுகொலைக்கு ஆளாகி தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமைத்தனத்தை முறித்து தங்கள் மண்ணை சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக்கொண்டதை கோலாகலமாக கொண்டாடி மகிழும் கருப்பர் இன மக்களை காணும்போது ஈழத் தமிழர்களும் அவர்தம் பிள்ளைகளும் இப்படி சுதந்திர நாள் விரைவில் மலராதா என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.

சூடான் அதிபர் அல் பசீர் நடத்திய இனப் படுகொலை குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றம் அவரை இன கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்தது.

இதேபோன்று லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அவரது கூட்டாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், அதற்குரிய நடவடிக்கையை ஐநா மன்றமும் உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்குப்பதிவு சர்வதேச பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். இதனை தெற்கு சூடான் உதயமான ஜூலை 9ம் நாளன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம். தெற்கு சூடானின் உதயம் சர்வதேச அரங்கில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான நுழைவாயில் ஆகட்டும்.

-இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/11/vaiko-new-hope-on-tamil-eelam-aid0136.html

கருத்துகள் இல்லை: