செவ்வாய், 5 ஜூலை, 2011

நிலச் சிக்கலில் மாஜி மந்திரி நேரு!: பழிவாங்கப்படும் திமுகவினர்- ஸ்டாலின்

சென்னை: திருச்சி மாவட்டத்தில் நில அபகரிப்பு மற்றும் நில மோசடி புகார்கள் குறித்து நில மீட்பு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறையூரில் காமராஜ் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக திருச்சி மாநகராட்சி கோட்டத் தலைவர் அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டார். மேலும் சில தி.மு.க. பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி சிந்தாமணி வி.என். நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் கொடுத்துள்ள புகாரில்,

திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு செல்லும் பாதை எங்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் ஆகியோரிடம் கேட்ட போது இடத்தை பற்றி பேசினால் கஞ்சா வழக்கு போடுவோம் என மிரட்டினர். அதே போன்று பஸ் உரிமையாளர் ராஜகோபால், செல்வேந்திரன் ஆகியோரும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

செல்வேந்திரன் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், குடமுருட்டி சேகரின் உறவினர் ஆவார். ஏற்கனவே குடமுருட்டி சேகர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், செல்வேந்திரனும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

இந்த நில ஆக்கிரமிப்பு புகார் குறித்து திருச்சி மாநகர விசாரிக்க கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுதேவனுக்கு போலீஸ் கமிஷனர் மாசானமுத்து உத்தரவிட்டுள்ளார்.

நேரு உள்ளிட்டோர் மீதான இந்தப் புகாரால் திருச்சி திமுகவினரிடையே பரபரப்பு நிலவுகிறது.

திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை-ஸ்டாலின்:

இந் நிலையில் நில அபகரிப்பு என்ற பெயரில் எவ்வித ஆதாரமும் இன்றி திமுகவினர் பழிவாங்கப்பட்டு வருவதாக திமுக பொருளாளரும், சட்டப் பேரவை திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் மைலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு என்ற பெயரில் எவ்வித ஆதாரமும் இன்றி திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆதாரம் இருந்தால் யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் சந்திக்காத வழக்குகள் இல்லை.

கமிஷன்கள் இல்லை. அதிமுக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம். திமுக என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 6 மாதம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே மக்களின் எதிர்ப்பை இந்த அரசு சம்பாதித்துள்ளது.

திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்கள் கூட, திமுக ஆட்சிக்கு வரவில்லையே என வருத்தப்படுகிறார்கள். அதனால் 2016க்கு முன்பாகவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ளது. அதுவரை மக்களுக்காகப் போராடுவோம் என்றார் ஸ்டாலின்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/05/land-encroachement-ex-minister-nehru-in-trouble-aid0128.html

கருத்துகள் இல்லை: