சனி, 23 ஜூலை, 2011

கருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா? ஸ்டாலின் அழகிரி மோதல் வெடிக்குமா? பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு கூடுகிறது

கோவை: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள திமுகவின் செயற்குழு இன்று கோவையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டம், திமுக தலைமையில் மாற்றம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை தீவிரப்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். எனவே தயாநிதிமாறன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் நிலை.

இன்னொரு பக்கம் திமுக தலைமைப் பதவிக்கான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது, முன்னெப்போதும் இல்லாத வகையில்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்?

நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாளில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.

ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுபோக தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கோவையில் திமுக தலைவர்கள்:

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் இன்று (சனிக்கிழமை) கூடுகிறது. முதலாவதாக இன்று மாலை 4 மணிக்கு தி.மு.க. செயற்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அண்ணா வளாகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க. தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பற்றி முக்கியமான விவாதங்கள் இடம் பெறும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வுக்கு எதிரான போராட்டம் குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுக்கு பதில், மக்களவைக் குழுக்கள் அமைத்து அதன்கீழ் அவர்களை செயல்பட வைக்கலாமா? என்று தி.மு.க. தலைமைக்கழகத்தால் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நாளை பொதுக்குழு:

இதைதொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,950 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தி.மு.க.வினர் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கோவை சென்றார். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அண்ணா வளாகத்திற்கு சென்று கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருணாநிதி கோவை பயணம்:

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று இரவு 10.10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.

செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


nanry http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: