வியாழன், 21 ஜூலை, 2011

ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி

சென்னை: குற்றம் செய்பவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்ற இமாலயத் தவறை திமுக என்றைக்கும் செய்யாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றங்கள் - தவறுகள் - கொள்ளைகள் - கொலைகள் - எங்கே நடைபெற்றாலும் - அதை யார் நடத்தினாலும் - அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திடமாட்டோம். அப்படிச் செய்பவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்க மாட்டோம்.

இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும் - அடக்குமுறையை தனது போர்வாளாகவும் - "இம்'' என்றால் சிறைவாசம் - "ஏன்'' என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப் பாடலாகவும் ஆக்கிக் கொண்டு - "எதிர்க்கட்சிகளை குறிப்பாக தி.மு.க.வினரை - அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலை காட்டாமல் இருந்திருந்தாலும் - எல்லோரையும் சகட்டுமேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன்; சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுப்பேன்; மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவர்களைப் பிரித்து தனிமைப்படுத்தி - முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன்'' - என்று கூச்சலிட்டு - தன் முதுகிலே இருக்கிற புண்ணுக்கு மருந்து தடவிடவும் மறந்துவிட்டு - ரத்தப் பலி வரையிலே கேட்பேன் - என்று நித்தம் உரைக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம்!

நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்தபடியெல்லாம் திட்டங்களை அறிவித்து - பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் - எள்ளி நகையாட - எல்லா அறிவிப்புக்களுமே மக்கள் மன்றத்தில் - நீதிமன்றத்தில் தூள் தூளாக நொறுங்கிப் போவது கண்டு மேலும் மேலும் எரிச்சல் மிகக்கொண்டு - "எங்கிருக்கிறான் எதிர்க்கட்சித் தோழன்? எங்கிருக்கிறது அவன் குடும்பம்? எங்கே போய்விடுவார்கள் என் வஞ்சக வலையில் சிக்காமல்?'' என்று பொய்த் திரை போட்டு -இந்தப் புவியில் வாழ்வோர் கண்களை இருட்டாக்கி - இன்னும் எத்தனை காலம் இங்குள்ளவரை ஏமாற்ற நினைத்திடுவார் என்ற முழக்கம் எங்கெங்கு திரும்பினும் கேட்குதடா! எட்டுத் திசையும் ``இனி தொலைவாய்'' என்ற முழக்கமடா!

இதுதான் இன்றைய தமிழ்நாட்டு நிலை. இந்த நிலை மாற்ற நெருப்பின் பொறிகளே! நீங்கள் தான் தேவையென்று திராவிட இன இளைஞர்களை அன்று தட்டி எழுப்பிய பெரியாரும், அண்ணாவும் இதோ ஒன்றாக ஓரணியில் நின்று உங்களை அழைக்கின்றார்கள்!.

அறப்போர் குறித்து ஆயிரம் சாதனைகளைப் படைத்த அண்ணன், தம்பிகளே! ஆருயிர் உடன்பிறப்புகளே! அதோ; தெரிகிறது வெளிச்சம் -அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்! அல்லல் நீங்கும்! தொல்லை குறையும்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/21/get-ready-take-on-admk-regime-karunanidhi-cadres-aid0090.html

கருத்துகள் இல்லை: