வியாழன், 7 ஜூலை, 2011

ஸ்ரீரங்கம் கோயிலில் புதையல்: ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

திருச்சி, ஜூலை 6: திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி திருக்கோயிலைப் போன்று, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலும் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொன் காசுகள் கொண்ட புதையல்கள் இருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதால், அதை ஆய்வு செய்ய வேண்டும் என, ஸ்ரீரங்கம் திருக்கோயிலைப் பற்றியும், அங்குள்ள கல்வெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்த அ. கிருஷ்ணமாச்சாரியார் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
"ஸ்ரீரங்கம் கோயில் கி.பி. 1736 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளுக்கு பல ஆபத்துகளைச் சந்தித்தது. இதுபற்றிய ஆய்வை மேற்கொண்ட போது புதுச்சேரி அனந்தரங்கம் பிள்ளையின் நாள்குறிப்பை கவனத்தில் கொள்ள நேரிட்டது.
குறிப்பாக, 1755 ஆம் ஆண்டு பிரெஞ்சு படையினர் ஸ்ரீரங்கம் கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொன் காசுகள் இருந்த ஸ்ரீபண்டாரத்தைக் கொள்ளையிட வந்தனர் என்பதை அந்த நாள்குறிப்பு உறுதி செய்கிறது.
இந்தக் குறிப்புகள் மூலம், படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கம் கோயிலில் ஆலி நாடன் திருச்சுற்றில் உள்ள கருடர் சன்னதிக்குப் பின்புறம் அந்த ஆபரணங்களையும், பொன் காசுகளையும் அப்போதைய ஸ்தலத்தார்கள் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
இப்போதுள்ள நவீன கருவிகள் மூலம் கருடர் சன்னதிக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாமல், அந்தப் புதையலின் தன்மையை அறியலாம். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றார் கிருஷ்ணமாச்சாரியார்.
http://www.dinamani.com

கருத்துகள் இல்லை: