திங்கள், 25 ஜூலை, 2011

இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்: யு.எஸ்.காங்கிரஸ் நிறைவேற்றுகிறது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

அமெரிக்க ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ரஷ் ஹோல்ட், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர் மைக்கேல் ஜி. கிரிம் ஆகியோர் அவைத் தீர்மானம் எண் 177 கொண்டு வந்துள்ளனர். இதற்கு செனட், காங்கிரஸ் ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

“இலங்கையில் மனித உரிமைகளும், அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்பும் ஆதரவாளர்களே, அங்கு உள்நாட்டு கட்டுமானங்களும், மறு குடியமர்த்தலும், இணக்கப்பாடும் ஏற்பட வேண்டும், அதன் மூலம் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்பும் நாங்கள் அவைத் தீர்மானம் 177ஐ அறிமுகம் செய்துள்ளோம். 2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போரில் 7,000 முதல் 40,000 பேர் வரை இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, போர் நடந்த பகுதிக்குள் செய்தியாளர்களையும், மனித உரிமையாளர்களையும் அனுமதிக்காததால் அங்கே நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வது கடினமாகவுள்ளது.

2002ஆம் ஆண்டு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததில் இருந்து அந்நாட்டில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஆராய இலங்கை அரசு ‘கற்ற பாடங்களும், இணக்கப்பாடு ஆணையம்’ என்ற ஒன்றை அமைத்தது. ஆனால் அதன் செயல்பாடு அரசுக்கு ஆதரவானதாக இருக்கிறது என்றும், உண்மையை கண்டறிவதில் அது ஆர்வம் காட்டவில்லை என்றும் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. எனவே, அந்தப் போரில் இரு தரப்பினரும் செய்த குற்றங்களை முழுமையாக ஆராய பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் அந்நாட்டில் அமைதியும், உண்மையான இணக்கப்பாடும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவைத் தீர்மானம் 177ஐ அறிமுகம் செய்துள்ளோம்.

இதேபோன்றதொரு தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வெற்றி பெற நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த இரண்டு உறுப்பினர்களும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் மீதான போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்நாட்டிற்கு எந்த நிதியுதவியும் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பன்னாட்டு விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினர் ஹோவர்ட் பெர்மன் அறிமுகம் செய்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், அது இலங்கை அரசு மீது கடும் அழுத்தத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிற சூழலில் இரண்டாவது தீர்மானம் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: