வியாழன், 14 ஜூலை, 2011

தி.மு.க., தலைமைக்கு எதிராக மாவட்ட செயலர்கள் புதிய வியூகம்

சென்னை: கட்சி அமைப்பை மாற்றியமைக்க நினைக்கும், தி.மு.க., தலைமையின் முடிவை மாற்ற, மாவட்டச் செயலர்கள் புதிய வியூகம் அமைத்து செயல்படத் துவங்கியுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், மாவட்டச் செயலர்களின் அட்டகாசங்கள் போன்றவை முக்கியக் காரணங்கள் என்பது தெரிய வந்தது. கட்சித் தோல்விக்கு, மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே காரணம் என, தொண்டர்கள் குற்றம் சாட்டினர். அவர்களில் பலர், தங்கள் மாவட்டத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன், குறுநில மன்னர்கள் போல் வலம் வருகின்றனர். அவர்களை நீக்கினால், கட்சிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை தடுக்கவும், தலைமையை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் மாவட்டச் செயலர்களை மாற்றவும் கட்சித் தலைமை முடிவு செய்தது. அதற்காக மாவட்டக் கழகத்தை கலைத்துவிட்டு, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக குழுக்கள் அமைப்பது என்ற அஸ்திரத்தை எடுத்தது.
அதை முறைப்படி செயல்படுத்த, "கட்சி அமைப்பை மாற்றி அமைக்கும் முடிவு தொடர்பான கருத்துக்களை, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டது. தலைமையின் முடிவு, மாவட்டச் செயலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த மாவட்டச் செயலர்கள் நேரடியாக தலைமையிடம், தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர்களில் சிலருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவர்கள் நேரடியாக ஸ்டாலினை அணுகி விவரம் கேட்டுள்ளனர். அவர், "உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எழுதி அனுப்புங்கள்; பொதுக் குழுவில் முடிவு செய்வோம்' எனக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள பொதுக் குழு உறுப்பினர்களை சந்தித்து, தற்போதுள்ள கட்சி அமைப்பை மாற்ற வேண்டாம் என கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதை ஏற்று பெரும்பாலானோர் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மாவட்டச் செயலர்கள் மீது அதிருப்தி கொண்டவர்கள் மட்டும், கட்சி அமைப்பை மாற்ற வேண்டாம் என, கடிதம் அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளனர். சிலர் நேரடியாக கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுக்க முனைந்துள்ளனர். ஆனால், தபால் மூலமே கடிதம் வர வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆறு மாவட்ட நிர்வாகிகள், மூன்று அல்லது நான்கு தலைமை செயற்குழு உறுப்பினர்கள், எட்டு அல்லது 10 தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், நகரச் செயலர்கள், ஒன்றியச் செயலர்கள் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினராக உள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், மாவட்டச் செயலர்கள் அறிவுறுத்தலின்படி, கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டாம் எனக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்டச் செயலர் மீது அதிருப்தியிலிருப்போர், கட்சித் தலைமையின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாவட்டச் செயலர்களின் ஆதரவாளர்கள் யார், அதிருப்தியாளர்கள் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிய வரும் என்பதால், தி.மு.க., தொண்டர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை ஆர்வமாக எதிர்பார்த்தபடி உள்ளனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274896

கருத்துகள் இல்லை: